தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார்.
1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு.
இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை. டக்களசின் முயற்சியால் சில அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருப்பது உண்மை ஆனால் அரசாங்கங்களுடன் முற்றிலுமாக இணைந்திருப்பதன் ஊடாக டக்ளசால் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடிந்ததா என்றால் இல்லை? தனக்கு அதற்கான அரசியல் பலத்தை வழங்கினால் தன்னால் அதனை செய்ய முடியுமென்று டக்ளஸ் வாதிடக் கூடும். இந்தப் பத்தி டக்ளசின் அரசியல் அணுகுமுறை தொடர்பில் ஆராய முற்படவில்லை மாறாக கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு தொடர்பிலேயே ஆராய முற்படுகிறது.
கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பெரிய வேறுபாடுகளை காண முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு கூட்டமைப்பு அரச ஆதரவு கட்சியாக மாறியிருக்கிறது. உரிமை பற்றி பேசி வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு தற்போது இணக்க அரசியலில் டக்ளசையும் தோற்கடித்துவிட்டது. ஆனால் இணக்க அரசியலை பொறுத்தவரையில் டக்களசிடம் ஒரு நேர்மை இருந்தது ஏனெனில் டக்களஸ் தனது இணக்க அரசியலை நிலைப்பாட்டை மக்களுக்கு நேர்மையாக செய்கின்றார். தேர்தல் காலத்தில் எதனைக் கூறுகின்றாரோ அதனைத்தான் தனது அரசியல் அணுகுமுறையாக பின்பற்றுகின்றார். ஆனால் கூட்டமைப்பிடம் அந்த நேர்மை கூட இல்லை. இன்று கூட்டமைப்பு ஹம்பரலிய என்னும் அரசாங்க திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதான ஒரு தோற்றத்தை காண்பித்துவருகிறது.
கடந்த நான்கு வருடங்களாக கூட்டமைப்பு அபிவிருத்தி பற்றி பேசவில்லை மாறாக, அரசியல் தீர்வு தொடர்பாக மட்டுமே பேசிவந்தது. இடைக்கால அறிக்கை, புதிய அரசியல் யாப்பு – என்றெல்லாம் மக்களுக்கு கதைகளை சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்தக் கதைகள் எல்லாம் காணாமல் போயிருக்கும் சூழலில்தான், அபிவிருத்தி பற்றி பேசுகின்றது. உண்மையிலேயே கூட்டமைப்பிற்கு அபிவிருத்தி பற்றி கரிசனை இருந்திருந்தால். அதனை கடந்த நான்கு வருடங்களில் செய்திருக்க முடியும். அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களையும் மக்களின் பொருளாதார பிரச்சினைகளையும் சமாந்தரமாக முன்னெடுத்திருக்க முடியும். மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தொடர்பான அதிருப்திகள் அதிரித்து வருகின்ற சூழலில்தான், அந்த அதிருப்திகளை தணிக்கும் வகையில் வீதி புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. கடந்த காலங்களில் இதனை செய்ய முற்பட்ட டக்ளஸ் போன்றவகளையும் ஏனைய இணக்க அரசியல வாதிகளையும் சலுகைகளுக்காக உரிமைகளை விற்பவர்கள் என்று கூறி விமர்சித்த அதே ஆட்கள்தான் இன்று ரணிலுடன் சேர்ந்து புதிய கட்டங்களுக்கான நாடாக்களை வெட்டிக் கொண்டிருக்கின்றனர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், இன்று ஹம்பரலிய திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கி;ற்கான அமைச்சர்களாகவே தொழிற்பட்டுவருகின்றனர். சம்பந்தன் – சுமந்திரனின் இணக்க அரசியலோடு ஒத்துப் போகாமையால் சிவசக்தி ஆனந்தனுக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லை. இதிலிருந்தே இது சம்பந்தனின் சரணாகதி அரசியலுக்கு கொடுக்கப்படும் அசியல் கையூட்டு என்பது தெளிவாகிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமைலான வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் சலுகைகளை பெற்றுவரும் கூட்டமைப்பால், எவ்வாறு இந்த அரசாங்கத்திற்கு எதிராக பேச முடியும்? அரசாங்கத்தின் தவறுகளை எதிர்த்து செயலாற்ற முடியும்? வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான செயலாளராக இருக்கின்ற கனடா குகதாசன் என்பவர், திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் தலைவராவார். எவ்வாறு தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வரமுடியும்? அரசாங்கத்தோடு முற்றிலுமா இணைந்து செல்வதுதான் கூட்டமைப்பிக் நிலைப்பாடு என்றால், அதனை டக்ளஸ் போன்று நேர்மையாகவே செய்யலாமே – ஏன் இவ்வாறு மறைமுகமாக செயற்பட வேண்டும்.
ஒரு முறை அமைச்சர் ராஜித சேனாரத்தின கூறியது போன்று – ஏன் பின்கதவால் வந்து பந்தியில் அமருகின்றீர்கள் – முன் கதவால் வந்து வாழையிலையில் போட்டு நன்றாக சாப்பிடலாமே! அபிவிருத்தி செயற்பாடுகளில கூட கூட்டமைப்பிடம் ஒரு நேர்மையான நிலைப்பாடு இல்லை என்பதைத்தான் இந்த செயற்பாடுகள் நிரூபிக்கின்றன.
கடந்த நான்கு வருடத்தை எடுத்து நோக்கினால், தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் கோரிக்கைகள் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான பொறுப்பு கூட்டமைப்பையே சாரும். இதில் வெறுமனே தமிரசு கட்சியை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தமிழரசு கட்சியின் அனைத்து தீர்மானங்களிற்கும் முண்டுகொடுத்து வரும், பங்காளிக் கட்சிகளும் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. கடந்த நான்கு வருடங்களாக அனைத்து விடயங்களுக்கும் முண்டுகொடுத்து விட்டு, பின்னர் முள்ளிவாய்காலுக்கு நடைபவணி செல்வதில் எந்தப் பொருளுமில்லை. முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் அனைத்தையுமே கூட்டமைப்பினர் தங்களின் வாக்கு வேட்டை அரசியலுக்காகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த பின்புலத்தில் பார்த்தால் அரசாங்கத்தோடு வெளிப்படையாக சேர்ந்தியங்கும் தமிழ் கட்சிகள் கூட்டமைப்பை விடவும் நேர்மையானவர்கள் எனலாம். ஏனெனில் அவர்களது செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் இருக்கிறது.
ஹம்பரலிய திட்டத்தின் கீழ் ரணிலிடம் கூட்டமைப்பு முற்றிலுமாக சரணடைந்திருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1990இல் முன்வைத்த நிலைப்பாட்டுக்கு முப்பது வருடங்கள் கழித்து சம்பந்தன் வந்திருக்கிறார். ஆனால் அதற்காக தமிழ் மக்களின் அரசியல் இருப்பை சம்பந்தன் விலைபேசுவதுதான் மிகவும் பாரதூரமானது.
டக்ளஸ் என்னதான் இணக்க அரசியல் பேசியிருந்தாலும் அதற்கான முழுமையான மக்கள் ஆதரவை அவர் இதுவரை பெற்றதில்லை. மக்கள் அதற்கான ஆதரவை அவருக்கு கொடுத்திருக்கவில்லை ஆனால் கூட்டமைப்போ மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு இவ்வாறு சரணாகதி அரசியலை செய்வதானது, இணக்க அரசியல் என்னும் வகைக்குள் கூட அடங்காது.
உண்மையில் கூட்டமைப்பின் அரசியல் என்பது தமிழ் மக்களின் ஆதரவின்றியே அவர்களை அரசாங்க நிகழ்சிநிரலுக்கு ஆதரவானவர்களாக மாற்றிருக்கும் மோhசமானதொரு அரசியலாகும். அந்த வகையில் பார்த்தால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கையை விடவும் கூட்டமைப்பு தாழ்ந்துவிட்டது.
யதீந்திரா