ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் வவுணதீவு காவல் துறை மீது!

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு காவல் துறை மீதான தாக்குதல் என காவல் துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு காவல் துறை விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறை அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் 19 திகதி வவுணதீவு காவல் துறை சோதனை சாவடியில் இருந்த காவல் துறையை கத்தியால் தானே குத்தி கொலை செய்துள்ளதாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும் கல்முனை – சாய்ந்தமருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் காவல் துறை அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.