ISIS பயங்கரவாதிகள் சுமார் 130 பேர் இலங்கையில் உள்ளனர்!- மைத்திரிபால சிறிசேன

ISIS பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் பலம் எமது நாட்டின் பாதுகாப்புத் துறையிடம் உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத இயக்கத்தை இலங்கையிலிருந்து அடியோடு ஒழித்து விரைவாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (26) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவு ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பாராத நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

இது தொடர்பான பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்தையும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தான் தயாராக இல்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு துறை மீது தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காவல் துறை , விசேட அதிரடிப் படை, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் முப்படையினர் மிகவும் வெற்றிகரமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ISIS பயங்கரவாத இயக்கம் பற்றிய அனுபவமுள்ள உலகின் முன்னணி நாடுகளின் நிபுணர் குழுக்கள் நாட்டிற்கு வருகை தந்திருப்பதாகவும், அவர்கள் எமது பாதுகாப்பு படையினருடன் இணைந்து விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும்  சிறிலங்கா  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பு தகவல்களுக்கு ஏற்ப இந்த பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுமார் 130 பேர் இலங்கையில் இருப்பதாகவும் அவர்களில் சுமார் 70 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதத்திற்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வருவதனை நினைவுபடுத்திய  சிறிலங்கா ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தற்போது இலங்கை முன்னெடுத்திருக்கும் போராட்டமும் இதற்கு காரணமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறான போதும் நாட்டினுள் ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பாராத நிலைமைகளுக்கு மத்தியில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய  சிறிலங்கா ஜனாதிபதி , நாட்டினுள் அமைதியான சூழலொன்றை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பொறுப்புடன் ஊடகங்களை கையாளுமாறும் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் ஒருபோதும் சந்தேகக் கண்கொண்டு நோக்க வேண்டாம் என்று தெரிவித்த சிறிலங்கா ஜனாதிபதி, ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துன்பியல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.