கொழும்பு குண்டுவெடிப்பில் மெல்பேர்ன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள தனது மகளை மெல்பேர்னுக்கு கொண்டுவந்து மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக சம்பவத்தில் காயமடைந்த 28 வயது பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
கொழும்பு கிங்கஸ்பரி ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்துள்ள குறிப்பிட்ட பெண்ணுக்கு கால் முறிந்துள்ளது.
சன்னங்கள் நுரையீரல் வரைக்கும் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சத்திரசிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையில் உள்ள இவருக்கு மேலதிக சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன.
காயமடைந்த பெண்ணின் தந்தை ரஞ்சித் வீரசிங்க மேலும் கூறும்போது தனது மனைவியும் மகளும் ஒரு மாத கால விடுறையில் இலங்கைக்கு சென்றிருந்தாகவும் மெல்பேர்னுக்கு திரும்புவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்த சூழலில் மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் உள்ள தனது மகளுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டுவருகின்றபோதும் அங்குள்ள நிலவரங்களை பார்க்கும்போது தனது மகளுக்கு போதியளவு – திருப்திகரமான – மருத்துவ உறுதிப்பாடு கிடைக்கும் என்று தான் நம்பவில்லை என்றும் மகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காயமடைந்துள்ள பெண்ணை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவருகின்ற விசேட செலவுகளை மருத்துவ காப்புறுதி உறுதிசெய்துகொள்ளுமா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், இவர் குறித்த விவரங்களை வைத்தியசாலைக்கு ஒவ்வொரு நாளும் சென்றுவரும் கொழும்பிலுள்ள அஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உறுதி செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.