கைபேசி தந்த…..

நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கைபேசியை உபயோகித்து வருகிறார்கள். அன்றாட வாழ்வில் நாம் எப்படி குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது போன்ற இன்றியமையாத பழக்கங்களை செய்து வருகிறோம். அதேபோல் கைபேசியை ஐந்து மணித்துளிகளுக்கு ஒருமுறை தொடர்ந்து ஆராய்ந்து பார்ப்பது, அதாவது எடுத்து பார்ப்பது நம்மை அறியாமல் நமக்கு ஏற்பட்ட முக்கிய பழக்கமாகிவிட்டது.

சுமாராக நடுத்தர வயது மிக்க நபர் இரண்டு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் வரை கைபேசியை உபயோகித்து வருகிறார். பெரும்பாலும் நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் சுமாராக 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது.

தமிழில் செய்திகளை கைபேசியில் தொடர்ந்து அனுப்புவதால் ஏற்படும் கழுத்து வலி என்று கூறலாம். அதாவது நம் கழுத்துப் பகுதியில் சுமாராக 40 தசைகளுக்கு மேல் உள்ளது. அதேபோல் 7 கழுத்து எலும்புகள் சிறியதாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கியது போன்ற அமைப்பு உள்ளது. இதில் முக்கியமாக நான்கு எலும்புகள் தலைப்பகுதியில் உள்ள 10 முதல் 12 பவுன்ஸ் எடையை தாங்குகிறது.

இந்த எடையை தாங்கும் திறன் இயல்பாக கழுத்து எலும்புகளுக்கு அமைந்துள்ளது. ஆனால் நாம் கழுத்துப்பகுதியை குனிந்த நிலையில் வைத்துக்கொண்டு கைபேசியை உபயோகித்து செய்திகளை பரிமாறிக்கொள்ளும்போது செவித்திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் கழுத்துப் பின்புறம் உள்ள தசைகளில் தேவையற்ற அதிக வேலை பளு கொடுக்க நேரும் போது நாளடைவில் கழுத்து தசைகளில் அயர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்துவதோடு தசைகளில் புரியாத ஒரு இறுக்கத்தை ஏற்படுத்துவதால் இனம்புரியாத வலியை உருவாக்குகிறது. தொடர்ந்து நாம் இதே முறையில் அதாவது கழுத்து முன்பகுதியை குனிந்தவாறு டைப் செய்யும்போது நம் அன்றாட பழக்கமாகி விடுவதால் இறுதியில் கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படும் அளவுக்கு சென்றுவிடும்.

என் தொழில்ரீதியான அனுபவத்தில் முன்பெல்லாம் 45 வயதிற்கு மேல் கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படுவது இயல்பாக இருக்கும். ஆனால் சமீப காலமாக அதாவது நான்கு வருடமாக கழுத்து வலி, கழுத்து சதை பிடிப்பு, கழுத்துப் பகுதியில் உள்ள சவ்வு விலகுதல், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற மாற்றங்கள் அதிகரித்து வருவதை உணர முடிகிறது.

அதாவது கழுத்து கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் கழுத்துப்பகுதியில் ஏற்படும் வழி நாளடைவில் நாள்பட்ட கழுத்து வலியாக மாறும். 21-ம் நூற்றாண்டில் நமக்கு ஏற்பட்ட ஒரு குறைபாடாகவே இதனைக் கூறலாம். இதனால் சிலருக்கு தாங்க முடியாத தலைவலியும், ஒருபக்க தலைவலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கழுத்துப் பின்புறம் உள்ள சதைகளில் ஏற்படும் இறுக்கத்தால் ஏற்படும் தலைவலி என்று கூறுவது தெளிவாகப் புரியும். குழந்தைகளும் கைபேசியை உபயோகிப்பது அதிகரித்து வருவதால் இதுபோன்ற பிரச்சினை அவர்களுக்கு தலைவலி போன்று முதலில் தெரிய ஆரம்பிக்கும். கண் பரிசோதனை மருத்துவரை அணுகி பரிசோதித்து சிலர் இதற்காக குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதும் நேரிடலாம்.

இதனை தடுப்பதற்கு சில வழிகள்….

கைபேசியை உபயோகிக்கும் போது முடிந்தவரை கழுத்தை கீழ்நோக்கி குனிந்த நிலையில் உபயோகிப்பதைத் தவிர்த்து உங்கள் கண்களுக்கு நேர்கோட்டில் இருக்கும்படி உபயோகியுங்கள். தொடர்ந்து கைபேசியை உபயோகித்து செய்திகளை அனுப்ப நேரிட்டால் சுமாராக பத்து நிமிடத்திற்கு ஒரு நிமிடம் தலையை நிமிர்ந்து பார்ப்பது உங்கள் கழுத்துப் பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் வேலைப்பளுவை குறைக்கும் படுத்துக்கொள்ளும் நிலையிலோ அல்லது சோபாவில் படுத்துக்கொள்ளும் நிலையிலோ கைபேசியைஅதிக நேரம் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

கழுத்து மற்றும் தலை பகுதியை தரைப்பகுதியை நோக்கியவாறு தொடர்ந்து கைபேசியை உபயோகிப்பதை தவிர்க்கவும். குழந்தைகளுக்கும் மேற்கூறியதை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்கவும். காணொளிகளை தொடர்ந்து படுத்துக்கொண்டே பார்ப்பதை தவிர்க்கவும் முடிந்தவரை அதற்கு ஊடகமான தொலைக்காட்சிப் பெட்டியை உபயோகிக்கவும். வலிகளோடு வாழ்வதைத் தவிர்த்து உங்கள் கைபேசியை சரியான முறையில் உபயோகித்து வாழ்வது மற்றும் இல்லாமல் பிற்காலத்தில் ஏற்படும் கழுத்து, எலும்பு தேய்மானம், ஜவ்வு விலகல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

செந்தில்குமார் தியாகராஜன்,

கல்லூரி விரிவுரையாளர், பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

குமாரபாளையம்.