கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் பிரபல ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய புதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து தெமட்டகொட வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இவருடன் சேர்ந்து இவரது மற்றொரு மகனான லியாஸ் அகமட் இப்ராஹிம் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
தெமட்டகொடவிலுள்ள குறித்த வர்த்தகரின் ஆடம்பர மாளிகையை சோதனையிடசென்றபோது அங்கு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதில் முதலாவது குண்டுவெடிப்பில் மூன்று காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.
அடுத்து ஆடம்பர மாளிகையின் மேல்மாடியில் காவல் துறை தேடுதல் நடத்தசென்றவேளை சில நபர்கள் தானியங்கிமூலம் குண்டை வெடிக்கவைத்துள்ளனர். இதேவேளை பிறிதொரு காவல் துறை குழு தேடுதலை மேற்கொண்டபோது மற்றொரு குண்டுவெடிப்பு கேட்டது. இதில் பாத்திமா ஜிப்றி (வயது 25) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு குண்டுவெடிப்புக்களும் தானியங்கி மூலமே நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தவேளை சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான அல்காஜ் யூசுப் மொகமட் இப்ராஹிம் கடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பியின் கட்சியில் போட்டியிட்டதாக விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் குறித்த வர்த்தகர் கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது எட்டுவருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதென்றும் வர்த்தககுழு ஒன்றுடன் அமைச்சர் றிசாத் சந்தித்தவேளை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.