நியூசிலாந்து மசூதி தாக்குதல்களுக்கு பழிவாங்க இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலா?

நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் 3 தேவாலயங்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. மேலும் 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 இந்தியர்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த கோரச் சம்பவம் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்த அந்நாட்டின் ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனே ‘நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.