கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் ஷங்கரில்லா, சினமன் கிரேண்ட், கிங்ஸ்பெரி ஹொட்டல் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், இது தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பதுளை – தியதலாவை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றி வளைப்பு விமானப் படையினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் கியான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.