இலங்கையில் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் உலக தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியா
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் உண்மையிலேயே பயங்கரமானவை. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையை இழக்காமல் செயற்படவேண்டுயம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது
இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் 138 பேர் உயிரிழந்துள்ளனர். 600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்கா இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது. நாம் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
இந்திய பிரதமர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
’இலங்கையில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை.
துயரமான இந்த வேளையில் இலங்கை மக்களுடன் இந்தியா துணையாக நிற்கும். இன்றைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ள செய்தியில்
ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட இந்த கொடூரமான தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
துருக்கி
துருக்கி பிரதமர் எண்டோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் இந்தத் தாக்குதலானது மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். துருக்கிய மக்கள் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர்
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள இஷ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நெருக்கடியான இந்த நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றினைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
விளாடிமிர் புடின்
தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலானது கொடூரத்தனமான தாக்குதல் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இலங்கைக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ள புடின், இலங்கையுடன் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக போரடவும் நாம் தயாராகவுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.