தாய்லாந்தில் இளம்பெண்ணின் ஆடையை களைய முயன்றவரிடம் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 43 வயதான வெய்ன் மார்க்ஸ் என்பவர், தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று வெய்ன் மார்க்ஸ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் மதுக்கடை ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த சானி இன்ராராங் (30), நேரடியாக ஒரு பெண்ணிடம் சென்று மேலாடையை கழற்றி தருமாறு வற்புறுத்தியுள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், சிறிது நேரம் கழித்து கழற்றி தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாத சானி, வலுக்கட்டாயமாக மேலாடையை கழற்ற முயன்றிருக்கிறார்.
இவற்றை எல்லாம் அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த வெய்ன் மார்க்ஸ், வேகமாக தலையிட்டு தடுக்க மூன்றுள்ளார். அப்போது சானி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு 12 முறை மார்க்ஸ் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மார்க்ஸை மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மார்க்ஸ் வெள்ளிக்கிழமை முதல் அங்கிருந்த செவிலியர்களிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சானியிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த இளம்பெண் உடுத்தியிருந்த ஆடை அவருடைய காதலியின் ஆடை என்பதும், அந்த ஆடைக்கு பணம் கொடுக்காமலே திருடி சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.