நடிகர் விஜய் குமார்
நடிகை விஸ்மயா
இயக்குனர் விஜய் குமார்
இசை கோவிந்த் வசந்தா
ஓளிப்பதிவு பிரவீன் குமார்
திரைப்பட போக்கு...
வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார்.
அந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் நாயகி விஸ்மயாவும் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் ஒருவர் இறக்கிறார். ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்த தொழிலாளியும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் என்று விஜய்குமாருக்கு தெரியவருகிறது.
தொழிலாளிகள் இறந்ததை வைத்து அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கர், போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூட வைக்கிறார். பின்னர் தொழிற்சாலையின் முதலாளி பணத்திற்கு ஆசைப்பட்டு ஆலையை அவரே திறக்க வைத்து விடுகிறார்.
சில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் விஜய்குமார்.
அதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இதற்கு காரணமாக செயல்படும் தொழிற்சாலை முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் விஜய்குமார் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
உறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருக்கிறார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருக்கிறார். முதல்பாதி துள்ளலான நடிப்பையும், பிற்பாதியில் போராடும் இளைஞராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார். ஏய் இங்க வாடா என்று போலீஸ் கூப்பிடும் காட்சியிலும், 500 அரசியல்வாதிகள் கோடி கணக்கில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதா… என பேசும் வசனங்களில் கைத்தட்டல் பெறுகிறார். இடைவெளிக்கு முன்பு பதற்றத்தையும், இடைவெளிக்குப் பின் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். படம் பார்ப்பவர்களை அந்த கிராமத்திற்கே அழைத்து சென்று விடுகிறார்.
மருத்துவராக திரையில் தோன்றும் நாயகி விஸ்மயா, காதல், மக்களுக்காக போராடுவது என நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாக வரும் சங்கர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய்குமாரின் நண்பர்களாக வரும் சுதாகர் மற்றும் அப்பாஸ் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தொழிற்சாலை முதலாளியாக வரும் துரை ரமேஷ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் இசை. 96 படத்தில் மெலோடி இசையை கொடுத்து மயக்கிய கோவிந்த் வசந்தா, இப்படத்தின் காட்சிகளில் நம்மை கடத்தி இருக்கிறார். இவருடைய பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. நம்பள ரொம்ப பீல் பண்ண வைத்திருக்கிறார் மனுஷன்.
பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் பாதிப்பையும் பரிதவிப்பையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார். கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. தெளிவான காட்சிகளில் இவரின் நுணுக்கமான வேலைபாடுகள் பெரிதும் உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘உறியடி 2’ அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி.