நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் தான் இறந்தார் என்று ஜப்பான் அரசு ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஜப்பான் சென்ற சுபாஷ் அதன் பிறகு நாடு திரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் இந்தியாவில் இல்லை.
இதனால் நேதாஜி பற்றிய பல யூகங்கள் வெளியானது. அவர் விமான விபத்தில் இறந்தார் என்றும் அவரது உடல் ரஷியாவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் பல தகவல்கள் வெளியானது.
நேதாஜி 1945-ம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. லண்டனிலும் நேதாஜி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது என்றாலும் அதற்கான உறுதியான ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான் அரசின் விசாரணை ஆவணத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தை ஜப்பான் அரசும், இந்தியாவும் ரகசியமாக வைத்து இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறது.
இது தான் முதலாவதாக வெளியான விசாரணை அடிப்படையிலான ஆவணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்திகதி தைவான் நாட்டின் தாய்பேய் நகரில் நடந்த விமான விபத்தில் பலியானார். அன்றைய தினம் அவர் பயணம் செய்த விமானம் ஓடுபாதையில் இருந்து உயரே கிளம்பிய போது விபத்துக்குள்ளானது. இதில் நேதாஜி விமானத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவர் தாய்பேய் நன்மான்கிளை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே நேதாஜி மரணம் அடைந்தார்.
அன்று பிற்பகல் 3 மணிக்கு நேதாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மாலை 7 மணிக்கு மரணம் அடைந்தார்.
அவரது உடல் ஆகஸ்ட் 22-ந்திகதி தாய்பேய் நகரமைப்பு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வாறு ஜப்பான் நாட்டு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் விமான விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் விமானம் உயரே பறக்க தொடங்கிய போது 20 மீட்டர் உயரத்தில் விமானத்தின் 3 பிரபல்லர்களில் (முன்னோக்கிகள்) ஒன்று சேதம் அடைந்து முறிந்து விட்டது.
இதனால் இடது பக்கமாக விமானத்தின் இறக்கை முறிந்து என்ஜினுடன் கீழே விழுந்தது. விமான நிலையத்தின் அருகில் உள்ள குவியலில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த ஆவணம் 1956-ம் ஆண்டே டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆவணம் 7 பக்கங்களில் ஜப்பான் மொழியிலும் 10 பக்கங்களில் ஆங்கிலத்திலும் இருந்தது.