மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார்.
‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் சொல்கிறார்:-
‘‘இந்த படத்தின் கதாநாயகன் நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்துக்கு தேவையான வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை, கதாபாத்திரம் மற்றும் தன் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதை மற்றும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு புதுமுக நாயகனுடன் இணைந்து நடிக்கிறார்.
வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
‘‘மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்’’ என்று கூறுகிறார், இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன்.
Eelamurasu Australia Online News Portal