வியட்நாமிய அகதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மனுஸ் தீவில் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட அகதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளர்.
சொந்த நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தலிருப்பதாகக்கூறி அவுஸ்திரேலியாவுக்கு வந்த குறிப்பிட்ட வியட்நாமிய அகதி அவுஸ்திரேலிய குடிவரவுக்கொள்கையின் பிரகாரம் மனுஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
அங்கு முகாமிலும் வெளியிலும் வைக்கப்பட்டிருந்த இந்த வியட்நாமிய அகதி சுமார் ஐந்து வருடங்களாக தன்னை அகதியாக ஏற்றுக்கொண்டு தஞ்சமளிக்கும்படி அவுஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்தார்.
இவரது விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வியட்நாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை மதுபான விடுதியொன்றுக்கு வெளியே குறிப்பிட்ட நபர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அங்கு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
இவரது மரணத்துக்கும் இவர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய காரணத்துக்கும் இடையில் நேரடித்தொடர்புகள் உண்டா என்பது குறித்து தெரியவில்லை என்றும் – அவர் வியட்நாமுக்கு திருப்பி அனுப்பப்படாவிட்டால் இந்த மரணம் சம்பவித்திருக்காது என்றும் அவுஸ்திரேலிய அகதிகள் நல அமைப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மனுஸ் தீவிலுள்ள அகதிகளும் தங்களது முன்னாள் சகாவினது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் ஊடாக தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal