சிறிலங்காவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி உதவிகள் குறித்து இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இதேவேளை ஆளுநருக்கும் சிறிலங்காவுக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷேரி ஹமிரனி ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுவருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது ஆளுநரால் கோரப்பட்டது.
இதற்கு சாதகமான கருத்தினை வெளியிட்ட ஈரானிய தூதுவர், முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஈரானின் மூன்று நிறுவனங்களை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் சிறிலங்காவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.