நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண் 2019

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநிகழ்வு இவ்வாண்டும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 13 – 04 – 2019 அன்று மாலை ஆறுமணிக்கு பிறிஸ்ரன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூர்ந்தனர்.

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் றகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியகொடியை மூத்த செயற்பாட்டாளர் மகேந்திரன் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தயாபரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு குகந்தினி தயாபரன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு நர்மதா ஜெயக்குமார் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது மகள் தமயந்தி காராளபிள்ளை  அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். மாமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் நளாயினி அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

மாமனிதர் குணாளன் மாஸ்ரர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது மகன் ஹரிதாஸ் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மருத்துவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

நாட்டுப்பற்றாளர் தருமராசா அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது மகன் அனுஜன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திலகராஜா அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து வருகைதந்த பொதுமக்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து Nirutha Indian Fine Arts School சேர்ந்த மாணவி சக்தி தயாபரன் அவர்களின் வணக்க நடனம் நடைபெற்றது.

நினைவுரையை மூத்தசெயற்பாட்டாளர் சிவேன் சீவநாயகம் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில் அவுஸ்திரேலிய நாட்டில் வாழ்ந்து தமிழீழ விடுதலைக்காக உறுதியோடு உழைத்த நாட்டுப்பற்றாளர்களின் சேவைகளை நினைவுகூர்ந்தார்.

சிறப்புரையை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கொற்றவன் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில் தியாகத்தாய் அன்னை பூபதியின் தியாகம் ஆனது அன்றைய காலத்தில் எத்தகைய முக்கியத்துவமானது என்பதை மனக்கண் முன்கொண்டுவந்தார்.

போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தின் தலைமையானது வெளிப்படையாக செயற்படமுடியாத காலத்தில் மக்கள் போராளியாக வெளியே வந்த அன்னை பூபதியின் அர்ப்பணிப்பான தியாகமும் அதுவும் முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து விடுதலைக்காக விதையான வரலாறும் உன்னதமானது என்பதையும் பதிவுசெய்தார்.

அதேபோன்று ஒவ்வொரு நாட்டுப்பற்றாளர்களின் அர்ப்பணிப்புகளைகளையும் குறிப்பாக சுட்டிக்காட்டி இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த உதவிகளை தாயகமக்களின் விடுதலைக்காக மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் சமூக அறிவித்தல்கள் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவுபெற்றது.