வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.
இதற்கிடையில், டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 24-ந் தேதி புதின் வடகொரியா செல்கிறார் என்றும், அந்த பயணத்தின் போது இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்றும் தென்கொரியா அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவலை ரஷியாவோ, வடகொரியாவோ உறுதிப்படுத்தவில்லை.
Eelamurasu Australia Online News Portal