கலப்பு நீதிமன்றம் அல்லது சிறப்புத் தீர்ப்பாயம் : கம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை கம்பூச்சியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கெமரூச் ரிபியூனல் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பு நீதிமன்றம் இரண்டு போர்க் குற்றவாளிகளுக்கு இரண்டாவது தடவை ஆயுள் தண்டனைகளை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கியூ சம்பான் 87 வயது. கெமரூச் அரசாங்கத்தின் அரசுத்தலைவராக இருந்தவர். மற்றவர் நுஓன் சே 92 வயது. கெமரூச் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதியாகவும் அவ்வியக்கத்தின் தலைவரான போல்ட்பொட்டின் வலது கையாகவும் இருந்தவர்.

1877 – 1979 வரையிலும் கெமரூச் ஆட்சியில் சுமார் 17 இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். 1979ல் கம்பூச்சியாவில் உள்ள அதிருப்தியாளர்கள் வியற்நாமியத் துருப்புக்களோடு இணைந்து கெமரூச் ஆட்சியை அகற்றிய போது கம்பூச்சிய சனத்தொகையில் கிட்டத்தட்ட 25 விகிதம் கொல்லப்பட்டு விட்டது. இப்படுகொலைகள் நிகழ்ந்து நாற்பது ஆண்டுகளின் பின் 1997ல் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. கெமரூச் தீர்;ப்பாயம் என்று அழைக்கப்படும் இக்கலப்பு நீதிமன்றத்தை ஐ.நாவும், கம்பூச்சிய நீதிமன்றமும் இணைந்து உருவாக்கின. பெருந்தொகைப் பணத்தை செலவழிக்கும் ஒரு பொறிமுறை என்று விமர்சிக்கப்படும் இத்தீர்ப்பாயமானது அதன் முதலாவது வழக்கை எடுக்க ஒன்பது ஆண்டுகள் சென்றது. பன்னிரண்டாவது ஆண்டில் அது மூன்று பேரைக் குற்றவாளிகளாகக் கண்டது. அதிலொருவர் போல்பொட். ஆனால் தீர்ப்பு வெளிவர முன்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியாமல் அங்கோவார்ட் காட்டுக்குள் கொல்லப்பட்டு விட்டார். அதன் பின் 2014ல் கியூ சம்பானுக்கும், நுஒன் சேக்கும் முதலாவது ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. அதன் பின் இரண்டாவது வழக்கில் இருவருக்கும் கடந்த ஆண்டு மீண்டும் ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.மூன்று கம்பூச்சிய நீதிபதிகளும் இரண்டு பன்னாட்டு நீதிபதிகளும் இணைந்து இத்தீர்பை வழங்கியிருக்கிறார்கள். யுத்தக் குற்றங்களுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் கெமரூச் தீர்ப்பாயத்துக்கான ஐ.நாச் செயலாளர் நாயகத்தின் விஷேச நிபுணத்துவ உதவியாளருமாகிய டேவிற் ஷெஃபெர் இத்தீர்ப்பை இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான நூரம்பேர்க் தீர்ப்புக்களுடன் ஒப்பிடத்தக்கது  என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நாற்பதாவது அமர்வில் போர்க்குற்ற விசாரணைகளுக்குக் கலப்பு நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் மறுத்திருக்கும் ஒரு பின்னணிக்குள் மேற்கண்ட கம்பூச்சிய உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 2015ல் ஜெனீவாவில் கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் மூன்றரை ஆண்டுகளின் பின் அந்த அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அவ்வாறு பின்வாங்குவதற்கு பலமான காரணங்கள் அவர்களுக்கு உண்டு. அது கம்பூச்சியக் களநிலவரங்களுக்கும், இலங்கைத்தீவின் களநிலவரங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளின் அடிப்படையிலானது.

கம்பூச்சியாவின் உள்நாட்டு அரசியலும், இலங்கைத்தீவின் உள்நாட்டு அரசியலும் ஒன்றல்ல. கம்பூச்சியாவின் பிராந்திய அரசியலும், இலங்கைத்தீவின் பிராந்திய அரசியலும் ஒன்றல்ல. இலங்கைத்தீவைப் போன்று இந்தோபசுபிக் மூலோபாய வட்டகைக்குள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஓர் அமைவிடத்தில் கம்பூச்சியா அமைந்திருக்கவில்லை.

எனினும் மேற்கண்ட எல்லா வேறுபாடுகளுக்குமப்பால் போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்பும் அனைத்துலக நீதிபதிகளும் சேர்ந்துருவாக்கும் விசேஷ தீர்ப்பாயம் என்று பார்க்கும் போது ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளோடு அது முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஒத்துப் போகின்றது. குற்றச் செயல்கள் நடந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளின் பின்னரே அங்கே ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. அதில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அனைவரும் தோற்கடிக்கப்பட்ட முன்னைய ஆட்சியின் பிரமுகர்கள். அதாவது வெற்றி பெற்ற தரப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் இலங்கைத்தீவில் வெற்றிபெற்ற தரப்பையே விசாரிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக யுத்த வெற்றியை ஒரு முதலீடாகக் கொண்டு 2015 வரையிலும் ஆட்சி செய்த ராஜபக்ஷ அணி மறுபடியும் தலையெடுத்திருக்கும் ஒரு பின்னணிக்குள் போர்க்குற்ற விசாரணைகளுக்கான கலப்புப் பொறிமுறை மட்டுமல்ல உள்நாட்டுப் பொறிமுறைக்கும் வாய்ப்புக்கள் உண்டா?

கம்பூச்சியாவில் மட்டுமல்ல இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் நடந்த பெரும்பாலான போர்க்குற்ற விசாரணைகளைப் பொறுத்தவரை வென்றவர்களே தோற்றவர்களை விசாரித்திருக்கிறார்கள். தோற்றவர்கள் கேட்டதற்காக வெற்றி பெற்ற தரப்பு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சந்தர்ப்பம் மிகக் குறைவு. இந்த உலக அனுபவத்தை முன்வைத்தே ஜெகான் பெரேரா போன்ற லிபரல் ஜனநாயகவாதிகள் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்குள் குற்ற விசாரணை என்ற அம்சத்தை வலியுறுத்தக்கூடாது என்று கேட்டு வருகிறார்கள்.

முன்னாள் நீதியமைச்சராகிய விஜேதாச ராஜபக்ஷ முதற்தடவை ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட போது பின்வருமாறு கூறினார். ‘போர்க்குற்ற விசாரணையும் நல்லிணக்கமும் ரயில் தண்டவாளங்கள் போன்றவை. ஒரு போதும் சந்திக்க முடியாது. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு மீண்டும் போர் மூளக்கூடிய அபாயம் தோன்றும்’ என்று. கிட்டத்தட்ட அதைத்தான் சற்றுக் குரூரமான விதத்தில் கடந்த மாதம் டிலான் பெரேரா கூறியிருக்கிறார். கலப்பு நீதிமன்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமந்திரன் ஆற்றிய உரைக்கு எதிர்வினையாற்றும் போது இப்படியெல்லாம் கதைத்தால் மற்றொரு 83 யூலை வெடிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது கொழும்பில் தமிழ் மக்களுக்கு அடி விழும் என்று அர்த்தம்.

இங்கு ராஜபக்ஷக்கள் மட்டும்தான் யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு ஆட்சி செய்யப் பார்க்கிறார்கள் என்பதல்ல. ஒட்டுமொத்த சிங்கள அரசியலே யுத்த வெற்றியைப் போற்றும் ஒரு தடத்தில்தான் நிற்கிறது. ஏனென்றால் யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் 2009ற்குப் பின்னரான ஆகப்பிந்திய வளர்ச்சிதான். எனவே வெற்றி பெற்ற பெருந்தேசியவாதம் அந்த வெற்றியைப் பாதுகாக்கவே விளையும். அந்த வெற்றியைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது வெற்றி நாயகர்களை விசாரிக்கவோ, தண்டிக்கவோ ஒப்புக்கொள்ளாது.

இது தேர்தல் ஆண்டு. கோத்தபாய வேட்பாளராக இறங்கலாம் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. அவர் தமது அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்கத் தயார் என்று தெரிகிறது. போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்பொழுது அமெரிக்கப் பிரஜாவுரிமை எனப்படுவது ராஜபக்ஷக்களுக்கு ஒரு வித முற்தடுப்பைப் போன்றது. மெய்யாகவே மேற்கு நாடுகள் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த விரும்பினால் அமெரிக்கப் பிரஜையாகவுள்ள கோத்தபாயவைத்தான் முதலில் விசாரிக்க வேண்டியிருக்கும். எனவே அமெரிக்காவுக்கு அப்படியொரு நோக்கம் உண்டா? இல்லையா? என்பதைக் கண்டறிவதற்குரிய ஒரு முற்தடுப்பாக கோத்தபாயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை காணப்படுகிறது. ஆனால் தேர்தல் வெற்றி தனக்கு நிச்சயம் என்று கருதியதனாலோ என்னவோ அவர் அப்பிரஜாவுரிமையைத் துறக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அங்கேயும் தடைகள் உண்டு என்று கூறப்படுகிறது. அவருடைய வேண்டுகோளை அமெரிக்கா சில சமயம் இழுத்தடிக்கலாமென்று ஓர் ஊகம் உண்டு. தவிர அவர் தன்னுடைய இலங்கைப் பிரஜாவுரிமையைத் துறந்துதான் அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் இப்பொழுது முதலாவதாக அமெரிக்கப் பிரஜைதான். அவ்வுரிமையை அவர் நீக்கும் போது போர்க்குற்றச்சாட்டுக்கு இலக்காகிய ஒருவர் தனது பிரஜாவுரிமையை நீக்குவதன் மூலம் அக்குற்றச்சாட்டிலிருந்து தப்ப முயல்கிறார் என்று கூறி முதலில் அவரை தான் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஒரு தடையை ஏற்படுத்தலாம் என்றும் சில அவதானிகள் கூறுகிறார்கள். கடந்த வாரம் அவ்வாறு இரண்டு வழக்குகள் அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே அடுத்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் கோத்தபாய இறங்குவாரா? இல்லையா? என்பதனை அவர் மட்டும் தீர்மானிக்க முடியாது என்றும் அமெரிக்காவும் விரும்பினால்தான் அது முடியும் என்றும் மேற்படி அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறானதோர் பின்னணிக்குள் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான விவகாரத்தை பின்தள்ளுவதன் மூலம்தான் ரணில் தேர்தல் களத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ரணிலைப் பாதுகாக்க விளையும் ஐ.நாவும், மேற்கு நாடுகளும் இது விடயத்தில் போர்க்குற்ற விசாரணைகளை அழுத்தி வற்புறுத்தப் போவதில்லை. எனவே நாடு அடுத்தடுத்துத் தேர்தல்களை எதிர்நோக்கும் ஒரு பின்னணியில் இப்போதைக்கு கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கான வாய்ப்புக்கள் அரிதாகவே தெரிகின்றன. அப்பொறிமுறைக்கு யாப்பில் இடமுண்டு என்று வீராவேசமாகப் பேசுவதன் மூலம் சுமந்திரன் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம். அவ்வாறான ஒரு கோரிக்கையை ஜெனீவாவில் நாங்கள் நிராகரித்து விட்டோம். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் முறித்து விட்டோம். உலக சமூகத்தை ஏமாற்றி எமது யுத்த வெற்றி நாயகர்களைப் பாதுகாத்து விட்டோம் என்று கூறி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள்?

கம்பூச்சியாவில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரே தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. அது தீர்ப்பை வழங்க 12 ஆண்டுகள் எடுத்தது. இத்தனைக்கும் அது வென்றவர்களால் தோற்றவர்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தீர்ப்பாயம். ஆனால் இலங்கைத்தீவிலோ வென்றவர்களே விசாரிக்கப்பட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். தோற்றவர்களோ ஜெனீவாவிற்குள் பெட்டி கட்டப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் ஜெனீவாவைத் தாண்டி பாதுகாப்புச் சபைக்கும், பொதுச் சபைக்கும் போவது எப்பொழுது? எப்படி? அங்கே தமக்கெதிராக வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்;தக்கூடிய நாடுகளைச் சமாளிப்பது எப்படி? அல்லது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் போவது எப்படி?

இது மிக நீண்டதொரு பயணமாக அமையலாம். இந்தோ பசுபிக் மூலோபாய வட்டகைக்குள் ஏற்படக்கூடிய வலுச்சமநிலை மாற்றங்கள் ஒருநாள் தமிழ் மக்களுக்கு சாதகமாக மாறலாம். கம்பூச்சியத் தீர்ப்பாயத்தைக் குறித்தும் அலெக்சாண்டர் ஹிற்ரொன் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்த நீதி முழுமையானதல்ல. ஆனால் நீதியின்மையை விட இது நல்லதே. அதோடு வேறு என்ன மாற்றுவழி? பெருமெடுப்பிலான படுகொலைகளுக்கு தண்டனை விலக்கா அலெக்சாண்டர் ஹிற்ரொன்; மனித உரிமைகளுக்கும் இனப்படுகொலைகளுக்குமான கற்கை மையத்தின் பணிப்பாளராகவும் ருட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான யுனஸ்கோ இருக்கையின் பணிப்பாளராகவும் இருக்கிறார்.

இது இலங்கைக்கும் பொருந்துமா? நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் எனப்படுவது நீண்டதாகவே தெரிகிறது. 2009ஐ உடனடுத்து தென்னாபிரிக்காவுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்த போது அவர்களைச் சந்தித்த ஓர் அரசியல் செயற்பாட்டாளர் பின்வரும் தொனிப்படக் கூறியது மிகப் பொருத்தமானது. ‘உங்களுக்கு உடனடியாக நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் தொடர்ந்து போராடுங்கள். உங்களுடைய போராட்டம் அவர்களுடைய தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கூரான வாளைப்போல் இருக்க வேண்டும்.

நிலாந்தன்