மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த மலங்காட்டு பகுதியில் வசித்தாலும் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழந்தனர்.
தண்ணீர், கல்வி மற்றும் ஏனைய பொதுத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதேநேரத்தில் கடந்த 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் குறித்த மக்கள் முள்ளிக்குளம் பகுதியில் மீள் குடியேற்றப்படாமையினால் கடந்த 2016 ஆண்டு முள்ளிக்குளத்தை பூர்விகமாக கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிலம் தங்களுக்கு வேண்டும் என கோரிக்கை முன்வைத்து முள்ளிக்குளம் கடற்படை முகாமக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த போராட்டத்தின் பலனாக அதே ஆண்டில் சில காணிகளை தவிர்த்து ஏனைய 100 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிப்பதகவும் ஏனைய பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதாகவும் அதே நேரத்தில் பொது மக்களின் வீடுகளில் குடியிருக்கும் கடற்படையினர் 6 மாத காலத்திற்குள் வெளியேறுவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டு மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குள் மீள் குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் மீள் குடியேறி இரண்டு வருடங்கள் கடந்தும் முள்ளிக்குளம் மக்கள் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படும் தற்காலிக கொட்டில்களில் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோன்று இதுவரை குறித்த மக்கள் வசிப்பதற்கு தற்காலிக பூரணப்படுத்தப்பட்ட கொட்டில்கள் , குடிப்பதற்கு நீர் வசதியோ மின்சார வசதியோ அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என முள்ளிக்குள மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர் .
பெண்கள் அதிகமாக இருக்கும் நிலையில் தங்களுக்கு என மலசல கூட வசதிகள் கூட இல்லாத நிலையே காணப்படுகின்றது எனவும் மழை காலங்களில் சேதமடைந்த கொட்டில்களில் தங்க முடியாத நிலையும் குளம் நிரம்புவதால் வெள்ளப்பதிப்பும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் மின்சாரவசதி இல்லாததால் இரவு நேரங்களில் யானைகளின் தொல்லைகள் கூட அதிகமாக காணப்படுவதால் தாங்கள் மீண்டும் மலங்காட்டு பகுதிக்கே செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையாவது செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனாலும் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் கடற்படையினர் மின்சார வசதி , அடுக்கு மாடி கட்டிடங்கள் , மற்றும் முள்ளிக்குள மக்களின் வீடுகளில் சொகுசு வாழ்கை வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.