கூட்டமைப்பு அரசைப் பாதுகாப்பதாகவும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதையுமே செய்வதில்லையெனவும் முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ச.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார்? என்பதை அவர் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. தமிழர்களுக்கு எதையும் வழங்கி விடக்கூடாது என்பதில் மகிந்த தீவிரமாக உள்ளார். புதிய அரசமைப்பின் உருவாக்கம் அடிப்பட்டுப் போனதற்கும் இவரே முதன்மைக் காரணம். இத்தகைய ஒருவர் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் போன்று நீலிக் கண்ணீர் வடிப்பதை எவருமே நம்பமாட்டார்கள்.
கூட்டமைப்பு மீதுமகிந்தவுக்கு வெறுப்பு
கூட்டமைப்பின் மீது காழ்ப்புணர்வு கொள்வதற்கு மகிந்தவிடம் பல காரணங்கள் உள்ளன. கடந்த அரச தலைவர் தேர்தலில் தாம் தோல்வியடைந்தமைக்கு கூட்டமைப்பே காரணமென்பதை அவர் நன்கறிவார். அதுமட்டுமல்லாது அரசியல் குழப்ப நிலையின் போது அவருக்கு வழங்கப்பட்ட தலைமை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டமைக்கும் கூட்டமைப்பு ரணிலுக்கு வழங்கிய ஆதரவே காரணமென்பதையும் மகிந்த மறந்திருக்கமாட்டார். அது மட்டுமல்லாது ரணில் தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதிலேயே தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அவர் கூட்டமைப்பு அரசுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருப்பதை வெறுப்புடனேயே பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதனால் தான் கூட்டமைப்பின் மீது சேறுபூசி விடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதிக நிதி ஒதுக்கீட்டில் வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்துள்ளார். இதில் பலாலி வானூர்தி நிலையத்தைப் பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றி அமைக்கும் திட்டமும் அடங்குகின்றது. கட்டு நாயக்கவிலும் மத்தளவிலும் இரண்டு பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் இருக்கும்போது பலாலியில் இன்னுமொன்று தேவையில்லையென மகிந்த எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.
ஆனால் வடபகுதியில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கப்படக்கூடாது என்பதுதான் அவரது நோக்கமாகும். பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாக்களைச் செலவிட்டு பொருத்தமற்றதொரு இடத்தில் அவரால் அமைக்கப்பட்ட மத்தள வானூர்தி நிலையம் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுவது ஏனோ அவரது கண்களுக்குத் தெரியவில்லை. பலாலி வானூர்தி நிலையம் அபிவிருத்தி செய்யப்படுமானால் வடபகுதி மக்கள் அதிக பயன்பெறுவார்கள். தற்போது அவர்கள் அனுபவித்து வருகின்ற பயணச்சிரமங்களுக்கும் ஒரு விடிவு கிடைக்கும். ஆனால் மகிந்தவுக்கும் அவரது தரப்பினருக்கும் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி என்ற பெயரால் கோடிக் கணக்கான பணத்தைக் கொடுத்து ரணில் அவர்களை வளைத்துப் போட்டுள்ளதாக மகிந்த வாய் கூசாமல் கூறுகிறார். ஆனால் இதை எவருமே நம்பமாட்டார்கள். அரச தலைவர் கூட கூட்டமைப்பினர் மீது வெறுப்பில் இருப்பதாகவே தெரிகின்றது. அதனால் தான் அவர்களைச் சந்திப்பதற்கு அவர் நேரம் ஒதுக்கித் தரவில்லை.
பலிக்கவில்லை பகல் கனவு
ரணில் தலைமையிலான அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பாதீட்டை நிறைவேறவிடாது தடுத்து விட்டால் அரசு கவிழ்ந்து விடும். தாம் ஆட்சியைக் கைப்பற்றி விடலாமென மகிந்த கனவு கண்டார். இதற்காகத் தம்மாலியன்ற முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டார். தமது எண்ணத்துக்குத் தடையாக நிற்கும் கூட்டமைப்பின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை அவர் சுமத் திக் கொண்டிருந்தார். ஆனால் கூட்டமைப்பினர் மகிந்தவின் கருத்துக்களைக் காதில் போட்டுக்கொள்வதாகவே தெரியவில்லை. அவர்கள் தாம் நினைத்ததைச் சாதிப்பதில் உறுதியாக இருப்பது தெரிகின்றது. அநேகமாக பாதீட்டின் மூன்றாவது மீதான வாக்கெடுப்பின்போது அரசுக்கு சாதகமாகவே கூட்டமைப்பு வாக்களித்தது. அரசை முற்று முழுதாகப் பகைத்துக் கொண்டு எதையுமே சாதிக்க முடியாதென்பது கூட்டமைப்புக்குத் தெரியாததல்ல. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதைத் தெளிவாகக் கூறிவிட்டார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிகா அம்மையாளர், மகிந்த ராஜபக்ச ஆகியோர் இந்த நாட்டின் அரச தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் போரும் இடம்பெற்றுள்ளது. இந்தக் காலப் பகுதியில் தமிழ் மக்கள் மோசமான அவலங்களைச் சந்தித்துள்ளனர். ஆனால் மகிந்த காலத்திலேயே இறுதிப் போர் இடம்பெற்றது. இதன்போது வரலாறுகாணாத மிக மோசமான பாதிப்புக்களைத் தமிழர்கள் எதிர்கொண்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். படையினர் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் தாராளமாக ஈடுபட்டனர்.
ஆனால் ஒரு சிறிய சேதம்கூட ஏற்படுத்தாமல் தாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக மகிந்த எந்தவிதமான கூச்சமுமின்றிக் கூறினார். தெற்கில் போரை வென்ற வெற்றி வீரனாக வலம் வந்தார். வடக்கில் இழவு ஓசை எழுந்த போது தெற்கில் ஜெயபேரிகை முழங்கியது. இத்தகைய ஒருவர்தான் இன்று தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர் போன்று காட்டிக் கொள்கின்றார். ஆனால் தமிழர்கள் இத்தகையவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு இனியும் மயங்க மாட்டார்கள். எது உண்மை எது பொய் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்
நன்றி- உதயன்