இன்று பல குடும்பங்களில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கி விட்டிருக்கும் ஒரு திட்டமாக நுண்கடன் விளங்குகிறது. இலங்கையைப் பொறுத்தவரை சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நுண்கடன் பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றன.
பல குடும்பப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்திலிருந்து இது வரை இந்த நுண்கடன் திட்டத்தோடு தொடர்புடைய 170 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மலையகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அரசாங்கம் கூடுதலாக பெரும்பான்மையினர் வசித்து வரும் மாவட்டங்களிலேயே தனது கவனத்தை திருப்புவதுடன் இதில் பாதிக்கப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரின் கடன்களை அடைக்க முடிவு செய்துள்ளது.
இவ்வாறு 12 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 45,139 பேரின் கடன்களை திருப்பிச்செலுத்த அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்களில் கண்டி,மாத்தளை ,நுவரெலியா ,பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள கடனாளிகள் பற்றி ஆராயப்படவில்லை.
குறித்த இம்மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் மத்திய தரவர்க்க குடும்பத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அதிக வட்டியை அறவிடும் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து நுண்கடனைப்பெற்று அதை திருப்பிச்செலுத்த முடியாது திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களைத் தவிர்த்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கடனை மீளச் செலுத்தும் திட்டமானது கிட்டத்தட்ட தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் ஒரு விடயமே என சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. மட்டுமன்றி நுண்நிதி கடனைப்பெற்று அதை திருப்பிச்செலுத்த முடியாது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பங்களைப்பற்றிய சரியான ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் இவ் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் இக்கடனை செலுத்த முடியாத அதே வேளை கடனை வழங்கிய தனியார் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்குதல்களை தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டோரை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா , அம்பாறை ஆகியன விளங்குகின்றன. இருப்பினும் அரசாங்கம் மீள கடனை திருப்பிச்செலுத்தும் திட்டத்தில் குருணாகல், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த 24,500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதே வேளை கடந்த வருடத்தில் மட்டும் மட்டக்களப்பு ,யாழ்ப்பாணம்,வவுனியா ஆகிய பகுதிகளில் 70 இற்கும் மேற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் குறித்த பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ஐயாயிரம் மட்டுமே.
இந்நிலையில் தற்கொலை வீதம் குறைவு என்றாலும் இந்த நுண்கடனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து விரக்தி நிலைக்குட்பட்டுள்ளனர் மலையகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் பெண்கள். ஒரு சிலர் நுண்கடன் நிதியில் சிக்கிக்கொண்டிருப்பது அவர்களது குடும்பத்திற்கே குறிப்பாக கணவன்மாருக்கே தெரியாது என்பது தான் முக்கிய விடயம். இவர்களில் பலரது கணவன்மார் வெளிநாடுகளிலும் தலைநகரத்திலும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தின் சில நகரங்களில் சராசரியாக 25 இற்கும் மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை நிதி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடலாமா இல்லையா, மத்திய வங்கியின் அங்கீகாரம் உள்ளதாக என்பது பற்றி ஆராயும் மனநிலையோ அல்லது அது பற்றிய தெளிவோ அங்கு கடன் பெறச்செல்லும் பெண்களிடம் இல்லை. குறித்த நிறுவனங்கள் பெண்களை மட்டும் குறி வைப்பதற்குக்காரணமே அவர்கள் எப்படியாவது பணத்தை செலுத்தி விடுவார்கள் என்பதாகும்.
மேலும் அரச வங்கிகளில் கேட்கப்படும் ஆவணங்கள் இங்கு குறைவு என்பதாலும் உடனடியாக பணம் கைக்குக் கிடைத்து விடும் என்ற காரணத்தினாலும் வட்டி அறவிடப்படும் முறை பற்றி எந்த கேள்விகளும் கேட்காது இவர்கள் கடனைப்பெறுகின்றனர்.
பிரதேச ரீதியாக குழுக்கள்
மலையகத்தில் பல குடியிருப்புப்பிரதேசங்களில் இந்த கடனைப் பெற்றுக்கொடுக்கவே சில குழுக்கள் இயங்கி வருகின்றன. இவர்களில் அநேகமானோர் பெண்களாகவே இருக்கின்றனர். தமது நிறுவனத்தில் கடனைப்பெற்றுக்கொள்ள ஆட்களை திரட்டுவதற்கு இவ்வாறானவர்களையே சில நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. அதற்கு அவர்களுக்கு கவர்ச்சிகரமான கமிஷன்களும் கிடைக்கின்றன என்பது முக்கிய விடயம்.
வட்டி அல்லது கடன்தொகையை மீளப்பெறுவதற்கு மேற்படி நிறுவனங்கள் தமது உத்தியோகத்தர்களை அனுப்புவதற்குப் பதிலாக இவர்களை வைத்தே அந்நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
சில நிதி நிறுவனங்கள் வாராந்த வட்டி பெறும் திட்டத்தை மாதா மாதம் பெறும் வண்ணம் மாற்றியமைத்துள்ளன. இதன் காரணமாக மாத இறுதியில் வட்டித்தொகையை வசூலிக்க இவர்கள் சென்று வருகின்றனர். அதுவும் மாலை வேளைகளில் இவர்கள் குறித்த குடியிருப்புகளுக்குச்செல்வது மிகவும் தர்மசங்கடமான நிலையாகும்.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள்
மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்றிருந்தாலும் சில நிதி நிறுவனங்கள் விதிமுறைக்கு முரணாக வட்டி வீதங்களை அறவிடுவது குறித்து சில சிவில் அமைப்புகள் தமது கவனத்தை திருப்பியுள்ளன. இதே வேளை நிதி நிறுவனம் அல்லாது அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் தற்போது நுண்நிதி கடன்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன.
வட்டி வீதம் குறித்த தெளிவான புரிதல்கள் இல்லாத காரணத்தினால் மக்கள் குறித்த நிறுவனங்களிடம் கடனைப்பெற்று அவற்றை திருப்பி செலுத்த முடியாது வட்டியைச்செலுத்தியே காலத்தை ஓட்டுகின்றனர். சில நேரங்களில் ஒரு நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகையை அல்லது வட்டியைச் செலுத்த மற்ற நிறுவனத்திடம் சென்று கடன் பெறுகின்றனர்.
இதனால் மேலும் மேலும் அவர்களின் கடன் சுமை கூடிச்செல்கிறது. நுண்கடன் சேவை என்பது பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ளவர்களை அதிலிருந்து மீட்கும் ஒரு செயன்முறையாகும். இதை உலகில் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சிறப்பாக முன்னெடுக்கின்றன. உதாரணமாக பங்களாதேஷின் கிராமின் வங்கி நுண்கடன் மூலம் அங்குள்ள யாசகர்களையும் தொழில்முனைவர்களாக மாற்றி சாதனைப்படைத்துள்ளது. ஏழை மக்களிடையே முரண்களை களைந்து அமைதி ஏற்பட வழிவகுத்த இச் சேவைகளுக்காகவே இவ் அமைப்பின் ஸ்தாபகரான முகமட் யூனுஸுக்கு 2006 ஆம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது முக்கிய விடயம்.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் சாதாரண மக்களையும் ஏழ்மை நிலைக்குக் கொண்டுச்செல்லும் செயற்பாடுகளையே சில நுண்கடன் நிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன. இவர்களுக்கு மக்களின் பொருளாதார ஏற்றம் எந்த வகையிலும் ஒரு பொருட்டல்ல. மலையகத்தில் குறப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அட்டன்,தலவாக்கலை,பொகவந்தலாவை, மஸ்கெலியா,கொட்டகலை போன்ற நகரங்களில் இந்த பொறிக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்கள் பற்றிய ஆய்வு அவசியமாகின்றது.
சிவலிங்கம் சிவகுமாரன்