அவுஸ்திரேலியாவில் பெருமளவில் பரவிவருவதாக சந்தேகிக்கப்படும் தட்டம்மை-Measles குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சுகாதாரத்திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தொற்று நோயிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் சுகாதாரணத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இதுவரைக்கும் 84 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த நோய் தாக்கம் பிலிப்பீன்ஸ் உட்பட ஏனைய நாடுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் வெளிநாடு சென்று வருகின்ற பயணிகளினால்தான் இந்த நோய் அவுஸ்திரேலியாவுக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
வெளிநாடு செல்கின்ற அவுஸ்திரேலியர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டு போகுமாறும் இந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்படுகிறது.
மிகச்சுலபமாக தொற்றிக்கொள்ளும் இந்த நோய், ஒருவருக்கு வந்துவிட்டால் பத்து நாட்களுக்கு பிறகுதான் இதன் அறிகுறிகள் வெளியில் தென்படத்தொடங்குவதாக கூறப்படுகிறது.
தோலில் சொறி ஏற்பட்டு சிவப்பு புள்ளிகளாக படர்ந்து செல்வதும் தொடர்ச்சியான வரட்டு இருமல் காணப்படுகின்றது.
நிறுத்தமுடியாத தடிமனும் கூடவே வந்துவிடுவதும் இந்த நோயின் அறிகுறிகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளுடன் காய்ச்சலும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, கம்போடியா, ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, வியட்னாம் போன்ற நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகின்ற இந்த நோய், பிலிப்பீன்ஸில் இந்த ஆண்டுமாத்திரம் 233 பேரை பலியெடுத்திருக்கிறது.
சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.