கடந்த காலங்களில் பாராளுமன்றுக்கு மிகக்குறைவான நாட்கள் வருகை தந்த எம்.பிக்கள் பட்டியலில் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் அடங்குகிறார். அந்த வகையில் அவர் 03/4/19 அன்று இடம்பெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு 8 நிமிடங்கள் வரை உரையாற்றியமையை அனைவரும் ஒரு அதிசய நிகழ்வாக நோக்குகின்றனர்.
மேற்படி அமைச்சின் மீதான விவாதத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பலரும் இம்மக்கள் பற்றிய தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை முக்கிய விடயம். எனினும் நீண்ட காலத்துக்குப்பிறகு இ.தொ.காவின் ஆறுமுகன் எம்.பி சில விடயங்களை முன்வைத்து பேசியிருந்தாலும் அதில் கூடுதலாக மாற்று அணியினரின் வேலைத்திட்டங்களில் குற்றம் கண்டு பிடிப்பதிலும் குறை காணும் போக்கே தென்பட்டது.
தனிவீட்டுத்திட்டத்தின் முன்னோடிகள்
மலையகத்தைப்பொறுத்தவரை தனி வீட்டுத்திட்டத்திற்கு அடித்தளமிட்டவர்கள் தனது தாத்தாவான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அமரர் சந்திரசேகரன் இருவருமே எனக்கூறியிருந்தார் ஆறுமுகன். அமரர் சௌமியமூர்த்திதொண்டமான் மலையக மக்களின் அரசியல்,கல்வி,பிரஜா உரிமை மற்றும் ஏனைய உரிமைகளைப்பெற்றுத்தருவதில் முன்னோடியாக இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.
ஆனால் அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மலையக மக்களின் நில உரிமை மற்றும் குடியிருப்புகள் பற்றி அக்கறை காட்டியிருந்தாலும் வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. எனினும் சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாவதற்கு முக்கியமான தருணத்தில் ஆதரவை வழங்கியதன் மூலம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்ற அம்சத்தை கேட்டு வாங்கிப்பெற்றார் அமரர் சந்திரசேகரன். அதன் மூலமாகவே மலையகத்தில் தனி வீட்டுத்திட்டம் உருவானது. ஆனால் அந்நேரம் காணி உரித்துப்பற்றி பேசப்படவில்லை. ஏனெனில் அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படவில்லை.
எனினும் தற்போது முன்னெடுக்கப்படும் வீடமைப்புத்திட்டத்தில் காணி உரித்து வழங்கப்படுகின்றது. இது மலையக வீடமைப்புத்திட்டத்தின் வளர்ச்சிப்போக்கை காட்டி நிற்கின்றது. இந்நிலையில் இதற்கு உரிமை கொண்டாடி நிற்பது அல்ல இப்போதைய தேவை. அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப அரசாங்கங்கள் மாறும் போது தமது சமூகத்துக்கான உரிமைகளை சாணக்கியமாகப்பெற்றுக்கொடுக்கும் பிரதிநிதிகளேயாம்.
மாடி வீட்டுத்திட்டம் பற்றி பேசாத ஆறுமுகன்
தனி வீட்டுத்திட்டத்தின் முன்னோடிகளாக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ,அமரர் சந்திரசேகரனை முன்னிலைப்படுத்திய ஆறுமுகன் தனது காலத்தில் முன்னெடுக்கப்பட்டு பலத்த சர்ச்சைகளுக்குப்பின்னர் நிறுத்தப்பட்ட மாடி வீட்டுத்திட்டத்தைப்பற்றி வாயே திறக்கவில்லை. ‘மாடி லயங்கள்’ என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட இத்திட்டம் தோட்டத்தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதில்லை என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில் கண்டியை தளமாகக்கொண்டிருந்த அரச சார்பற்ற அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையின் குடியிருப்புகள் தொடர்பான கண்காணிப்பு அதிகாரி மிலன் கொத்தாரியை இலங்கைக்கு அழைத்து வந்து இக்குடியிருப்புகள் தொடர்பாக பார்வையிடச்செய்தது. அவரும் இது எவ்விதத்திலும் தொழிலாளர்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதை அரசாங்கத்திடம் அறிவிக்கவே 2003 ஆம் ஆண்டு இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
ஆகவே இ.தொ.காவின் வீடமைப்புத்திட்ட செயற்பாடுகளில் இது ஒரு தோல்வியாகவே பார்க்கப்பட்டது. எனினும் கட்டி முடிக்கப்பட்ட எச்சங்களாக ஆங்காங்கே சில மாடி வீடுகள் மலையகத்தின் பல இடங்களில் இன்னும் காணப்படுகின்றன. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் இது கைவிடப்பட்டது. ஆனால் இது குறித்து தனதுரையில் ஆறுமுகன் குறிப்பிடவில்லை.
இந்திய வீடமைப்புத்திட்டம்
இந்திய வீடமைப்புத்திட்டம் முழுக்க முழுக்க தமது கோரிக்கையின் பிரகாரமே கிடைத்ததாக ஆறுமுகன் குறிப்பிட்டிருந்தார். மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்ட தறவில்லை. இவை எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுப்பதாக இருந்தது திலகராஜ் எம்.பியின் காரசாரமான உரை.
போருக்குப்பின்னரான காலப்பகுதியில் இந்திய அரசாங்கமானது வடக்கு கிழக்குப்பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை இலங்கைக்கு அமைத்துக்கொடுக்க முன்வந்தது. இந்நிலையில் குறித்த சமூகத்துக்கு மாத்திரமல்லாது இந்திய வம்சாவளி தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையின் பயனாகவே மலையக பிரதேசங்களுக்கு 4 ஆயிரம் வீடுகளும் முஸ்லிம் சமூகத்தினருக்கு 6 ஆயிரம் வீடுகளும் ஒதுக்கப்பட்டன என தனது உரையின் போது தெரிவித்திருந்தார் திலகராஜ் எம்.பி.
ஆனால் ஆறுமுகன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நான்கு வீடுகளைக்கூட இ.தொ.காவினால் அமைக்க முடியாது போய்விட்டது ஏனெனில் குடியிருப்புகளை அமைப்பதற்கு காணிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத்தெரியவில்லை என அவர்களின் பலவீனத்தை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அதே வேளை இந்திய அரசாங்கத்திடம் மலையக மக்களுக்கு நாமே வீடுகளைப் பெற்றுக்கொடுத்தோம் என்று கூறும் இ.தொ.காவினர் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் கொடுத்த 40 பஸ்களும் எங்கே என்று எழுப்பிய கேள்விக்கு இ.தொ.கா பக்கம் இருந்து ஒரு சத்தமும் இல்லை.
அதே வேளை இந்திய அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கும் 6 ஆயிரம் வீடுகளை வழங்கியுள்ளது. இதுவரை எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் அதை தாங்கள் தான் பெற்றுக்கொடுத்தோம் என்று உரிமை கோரியிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடல் அவசியம்.
ஏனைய பிரதிநிதிகளின் கரிசனை
மேற்படி விவாதத்தின் எதிர்கட்சி எம்.பிக்களான டலஸ் அழகப்பெரும மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் மலையக மக்கள் பற்றி கரிசனையுடன் பேசியிருந்தனர். மாத்தறை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுமார் 23 ஆயிரம் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் எந்த அரசாங்கமும் கவனிக்கவில்லை என டலஸ் எம்.பி குறிப்பிட்டிருந்தார். அதே வேளை எமது ஆட்சியில் தோட்டப்புற மக்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வியை மேற்படுத்த திட்டம் உள்ளது என நாமல் எம்.பி பேசியிருந்தார். தந்தை ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் ஏன் இதுவெல்லாம் இடம்பெறவில்லை என்பதற்கு நாமல் என்ன பதில் கூறப்போகிறார் என்பது தெரியவில்லை.
மேலும் மகிந்த ஆட்சியின் போது வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் அதில் ஒரு வீடு கூட அமைக்கப்படவில்லை என்பதை நாமல் அறிவாரா என்ன? கல்வியை மேம்படுத்த விசேட திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என்று கூறி நாமல் ராஜபக்ச ஏன் நெடுநாள் கோரிக்கையான மலையக பல்கலைக்கழகம் பற்றி பேசவில்லை என்பது பற்றியும் தெரியவில்லை.
குற்றஞ்சாட்டுவதால் என்ன கிடைத்து விடப்போகிறது?
மேற்படி அமைச்சின் விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமைச்சராகியிருந்தால் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை தீர்ந்திருக்கும் என்று தெரிவித்தார். இதனிடையே மகிந்தானந்த எம்.பி மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆறுமுகனும் திகாம்பரமும் சண்டையிட்டுக்கொள்ளாது அவர்களின் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
இ.தொ.கா என்பது நீண்ட வரலாற்றைக்கொண்ட பாரம்பரிய தொழிற்சங்கமாகும். இந்நிலையில் கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக ஆற்றிய பங்களிப்புகள் பற்றி எவரும் குறை கூற முடியாது. ஆனால் தற்கால சூழ்நிலையில் ஏனைய மலையக கட்சிகள் இம்மக்களுக்கு செய்து வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றில் குறை கூறுவதென்பது அக்கட்சியின் நீண்ட கால பாரம்பரியத்துக்கு பொருத்தமானதா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
பிரதிநிதிகளிடையே கட்சி ,தொழிற்சங்க வேறுபாடுகள் இருந்தாலும் சமூகத்துக்கு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து இவ்வாறு பிரிந்து நின்று செயற்படுவதானது பேரினவாதத்துக்கு சாதகமான அம்சங்களாகும். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களில் குறை காணும் இ.தொ.கா தனது அதிகாரம் இருந்த காலத்தில் கல்வி,சுகாதாரம், குடியிருப்பு,தொழிலாளர்களின் தொடர்பில் தேசிய அளவிலான எந்த திட்டங்களையாவது முன்னெடுத்திருக்கின்றதா என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
மட்டுமன்றி தனி வீட்டுத்திட்டம் பற்றி பேசியிருந்த ஆறுமுகன் எம்.பி. அமரர்களான தொண்டமான் மற்றும் சந்திரசேகரனைப்பற்றி மட்டும் கூறியதுடன் தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் என்ன செய்தோம் என்பது பற்றி கூறாமலிருந்ததன் மூலம் தனது காலத்தில் எவ்வித அபிருவித்திகளும் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
தேசியன்