வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று (31) நடைபெற்றது.
ஆலய வரலாறு –
தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் ‘ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே. மன்னருடன் அரசவையும் சென்று தலை வணங்கிய தலைசிறந்த ஆலயமாக இது விளங்கியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
1478ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த கனகசூரியனின் மகனான சிங்கைப் பரராஜசேகரன் மேலும் இவ்வாலயத்தை வளமாக்கினான். வடக்கே சட்டநாதர் ஆலயத்தையும் கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தையும் தெற்கே கைலாயநாதர் ஆலயத்தையும் மேற்கே வீரமாகாளி அம்மன் ஆலயத்தையும் கட்டுவித்து நல்லையம்பதியில் அருளாட்சி பெருகச் செய்தான் என வரலாறு கூறுகிறது.