பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.
அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு என பல்வேறு பிரிவு போலீசார் வந்து குவிந்தனர்.
அந்த குண்டுகள் சோதனை செய்யப்பட்டன. அவை விமானங்களை சுட்டு வீழ்த்தி அழிக்க கூடிய துப்பாக்கி குண்டுகள் என தெரிய வந்தது. அவை ஒவ்வொன்றும் 30 மீ. மீட்டர் நீளம் கொண்டவை. அவை செயல்படும் நிலையில் இருந்தன. உடனே அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இவற்றை சிலர் கடத்தி வந்து இங்கு பதுக்கி இருக்கலாம். பின்னர் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்த போது குண்டுகள் சிதறி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
Eelamurasu Australia Online News Portal