கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அதனை தீர்த்துவைத்து உரிய சரியான காலத்தை அறிவிக்குமாறு கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் மொனராகலை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு மாதகாலத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச் சங்கத்தினர் இவ்வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளனர்.

 

சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் மொனராகலை அரச அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாம் வருடாந்தம் யாழ். செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்வதை தாங்கள் அறிவீர்கள்.

இந்தவருடம் தமிழ் நாட்காட்டியில் கதிர்காமக் கொடியேற்றம் 02.07.2019ஆம் தகிதி நடைபெறும் என்றும் தீர்த்தோற்சவம் 18.07.2019ஆம் திகதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆங்கில நாட்காட்டியில் கதிர்காம எசலபெரஹரா 16.07.2019ஆம் திகதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கதிர்காமம். கொம் இணையத்தளத்தில் கதிர்காமக் கொடியேற்றம் 31.07.2019ஆம் திகதி நடைபெறும் என்றும் தீர்த்தோற்சவம் 15.08.2019ஆம் திகதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எங்களை பொறுத்தவரை குழப்பமாகவுள்ளது. எனவே நாங்கள் முறைப்படி பாதயாத்திரையை உரிய தினத்தில் ஆரம்பிப்பதற்கு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கதிர்காம உற்சவ காலத்தை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

அப்படி இந்தவருடம் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே உரிய தினத்தில் பாதயாத்திரையை ஆரம்பிப்பதற்கு வசதியாக கதிர்காம உற்சவ காலத்தை முன்கூட்டியே கோரி நிற்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.