மணிரத்தினத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ பெரிய கதை என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவது சாத்தியமில்லை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க வேண்டும். படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.
இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.