சீனாவின் பெரிய கனவுத் திட்டமான புதிய பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது.
பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. இத்திட்டத்தை சில நாடுகள் வரவேற்றபோதிலும், பல நாடுகள் படபடப்பு அடைந்திருக்கின்றன.
பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, அதன் வணிகத்துக்காக உருவாக்கிய பண்டைய பாதைதான், பட்டுப் பாதை. அதேபோன்று ஒரு நவீன தடத்தை அந்நாடு உருவாக்க முயல்கிறது.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின், ‘தி இன்வென்ஷன் ஆப் சில்க் ரோடு’ (பட்டுப் பாதை கண்டுபிடிப்பு) என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில், இப்பாதை குறித்த பல தகவல்களை விலாவாரியாகத் தெரிவித்திருக்கிறார்.
‘காதல் கருத்துகளைப் போல் அற்புதமானது பட்டுப் பாதை. ஆனால் வரலாற்று உண்மையுடன் இது மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளது. முதலில், பட்டுப் பாதை என்பது ஒற்றைப் பாதை இல்லை’ என்கிறார் டமாரா சின்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது பட்டுப் பாதை. அமெரிக்கா, உலக வல்லரசாக உருவாகத் தொடங்கியபின், 1500-ம் ஆண்டுவாக்கில், பட்டுப் பாதை நொடித்துப் போனது.
இருந்தாலும், அதன்பிறகு, ஜெர்மனி 1877-ல், பெர்டினான்ட் வொன் ரிச்தோபென் என்ற புவியியலாளரை சீனாவுக்கு அனுப்பியது.
சீனாவில் இருக்கும் நிலக்கரி இருப்பு மற்றும் அதை ஐரோப்பாவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே அவருக்கு அளிக்கப்பட்ட வேலை.
சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கு கண்டங்களை இணைக்கும் ரெயில் பாதை என்ற கருத்தின் அடிப் படையில் பெர்டினான்ட் பல கட்டுரைகளை எழுதினார்.
அதில், பட்டுப் பாதை என்ற வார்த்தையை அவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
ஆனால், அவர் கூறிய கருத்துகள் அந்தச் சமயத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1920-களில் அவரது மாணவர்களில் ஒருவர் இந்தத் திட்டம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொண்டார்.
சுவீடன் ஆராய்ச்சியாளரான ஸ்வென் ஹெடின், ஜெர்மன் மற்றும் சீன அரசுகளுடன் இணைந்து பணிபுரிந்தார். விமானியான இவர், சீனாவுக்கான விமானப் பாதை ஒன்றையும், சாலை வழி ஒன்றையும் திட்டமிட்டார். ‘பட்டுப் பாதை’ என்று இந்த புதிய வழித்தடங்களை அவர் குறிப்பிட்டார்.
மேற்கத்திய சக்திகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த பட்டுப் பாதைத் திட்டம் சீனாவுக்கு உதவியது.
தற்போதும் அதே எண்ணம் சீனாவிடம் வெளிப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சர்வதேச அளவிலான ஒரு கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், பட்டுப் பாதை திட்டம் பற்றி சீனா மற்றும் உலக வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருவதை சுட்டிக் காட்டினார்.
பட்டுப் பாதை என்பது இனிமேல் ஒரு முத்திரைச் சொல்லாக மட்டுமே இல்லாமல், சீனாவின் மையக் கொள்கையாகவும், முன்னணிக் கொள்கையாகவும் இருக்கும்.
அடுத்து, பட்டுப் பாதை குறித்த முக்கியமான புத்தகம், ‘சீனாவின் ஆசியக் கனவு’. ஆசியா முழுக்க பயணம் செய்த கஜகஸ்தான் அல்மாட்டியைச் சேர்ந்த மாணவர் டாம் மில்லர் எழுதிய புத்தகம் இது.
பட்டுப் பாதையில் சீனப் படைவீரர்கள் அணி வகுத்து நடப்பதை யாரும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படாது என்று மில்லர் கூறுகிறார்.
அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டத்தைச் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி மற்ற நாடுகளுக்கு சீனா பணம் கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கத்தானே பார்க்கும் என்று கேள்வி எழுப்புகிறார் இவர்.
இப்படி பல விமர்சனங்களை முன்வைக்கும் மில்லர், இத்திட்டத்தில் சீனாவின் முதலீட்டால் பிற நாடுகள் உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார்.
சீனாவின் பட்டுப் பாதை ஒப்பந்தங்களில் சில ஆசிய நாடுகள் கையெழுத்திட்டபோதும், பல நாடுகள் ஆர்வத்துடன் முன்வரவில்லை.
இதில் இருந்து விலகியிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சீனாவின் இந்தத் திட்டத்தை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. மாறாக, ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றன.
பட்டுப் பாதை என்ற பெயரில் தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா அதிகளவில் கடன்களை வழங்கி அந்நாடுகளை மீள முடியாத சுமையில் சிக்க வைப்பதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளை சீனா மறுத்து வருகிறது.
இந்தப் பாதையால், தடையற்ற பொருளாதார வாய்ப்பு ஏற்படும், அனைத்து நாடுகளும் பலனடையும், கூட்டாளி நாடுகளின் நலன்கள் ஊக்கம் அடைவதோடு, சீனாவும் நலம் பெறும் என்கிறது.
ஆனால் தனக்கு பெரும் ஆதாயம் இல்லாமல், சீனா பல லட்சம் கோடி டாலர்களை கொட்டுமா என்று கேள்வி அர்த்தமுள்ளது. அதற்கு, காலம்தான் பதில் சொல்லும்.