முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசை. இங்கிலாந்தில் முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசையை நிறைவேற்றும்விதமாக, அவரை கைது செய்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் வசிப்பவர் களின் ஆசையை நிறைவேற்ற இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது.
இதையடுத்து முதியவர்கள் தங்கள் ஆசைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி, அதற்கென தொண்டு நிறுவனம் வைத்திருந்த பெட்டியில் போட்டுள்ளனர்.
அதில் ஆன் புரோக்கன்புரோ என்ற 104 வயது பாட்டி, தான் வாழ்நாளில் ஒருமுறைகூட சட்டத்தை மீறி நடந்தது இல்லை என்றும், தன்னை ஒருமுறையாவது போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் தனது விருப்பத்தை எழுதியுள்ளார்.
அதைப் பார்த்து வியப்படைந்த தொண்டு நிறுவன நிர்வாகிகள், போலீசாரிடம் 104 வயது பாட்டியின் ஆசையை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
அதைக் கேட்டு முதலில் ஆச்சரியப்பட்ட போலீசார், பின்னர் 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
அதன்படி முதியோர் இல்லம் வந்த அவர்கள், சிறந்த குடிமகளாக இருந்த ‘குற்றத்துக்காக’ ஆன் புரோக்கன்புரோ பாட்டியை விலங்கிட்டு கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மீண்டும் முதியோர் இல்லத்துக்கே அந்தப் பாட்டியை கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றனர்.
தனது நெடுநாள் ஆசை நிறைவேறிய திருப்தியில் இருக்கிறார், அந்த ‘சதம்’ அடித்த பாட்டி.
Eelamurasu Australia Online News Portal