அவுஸ்ரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோல்வி

இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவுஸ்ரேலியாவில் இந்தியா ‘ஏ’, அவுஸ்ரேலியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதும் ‘நான்கு நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்’ தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா ‘ஏ’ அணி தனது கடைசி லீக்கில் இன்று அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியின் பேட்டர்சன், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் தாகூர் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி டக்அவுட் ஆனார். அடுத்து மேடின்சன் களம் இறங்கினார்.

இந்த இருவரும் இந்தியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. பேட்டர்சன் 115 ரன்னும், மேடின்சன் 118 ரன்னும் குவித்து அவுட்டானார்கள்.

இவர்களின் அபார சதத்தால் அவுஸ்ரேலியா  ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் தாகூர் 2 விக்கெட்டும், உனத்கட், பாண்டியா, வருண் ஆரோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணியின் பாஸல், மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாசல் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார்.

3-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங்குடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். மந்தீப் சிங் 56 ரன்னிலும், பாண்டே சதம் அடித்து 110 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட இந்தியா ‘ஏ’ அணி வெற்றியை நோக்கி பயணித்தது. கடைசி ஓவரில் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்தில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி இரண்டு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் சஞ்சு சாம்சன் துரதிருஷ்டவசமாக அவுட் ஆனார். அவர் 74 பந்தில் 87 ரன்கள் குவித்தார். இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் இந்தியா 1 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா ‘ஏ’ அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மணீஷ் பாண்டேயின் சதம் வீணாகிப்போனது. இந்த போட்டியில் தோற்றாலும் இந்தியா ‘ஏ’ அணி 16 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியாவை தோற்கடித்ததால் ஆஸ்திரேலியா அணியும் 16 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வருகிற 4-ந்திகதி நடைபெற இருக்கிறது.