ஜனாதிபதி வாசஸ்தலத்துக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு முன்பாக, இடையூறு விளைவிக்கும் வகையில் நடத்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், வாழைத்தோட்ட காவல் துறையால், அவர் கைதுசெய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போதே, நீதவான் லங்கா ஜயரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
போதைப்பொருளைப் பயன்படுத்திவிட்டு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முன்பாக, வீதியை மறித்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றே பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
எனினும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திருப்பும் வழியில், பாதசாரி கடவையில் அமர்ந்திருந்தே, உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தாரென, நீதிமன்றத்தில் நிரூபணமாகியது. அதனையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பில் கருத்துரைத்த அசேல சம்பத், “பொய்யான குற்றச்சாட்டின் கீழ், தன்னை கைதுசெய்தமை, மனித உரிமைகளை மீறும் செயலாகும். ஆகையால், வாழைத்தோட்ட காவல் துறைக்கு எதிராக, நட்டஈடுகோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.