ரகசியங்களை இனி வெளியிட மாட்டோம்- அவுஸ்ரேலிய நாளிதழ்

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக கசிந்த ரகசியங்களை வெளியிட கூடாது என கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி இது தொடர்பான செய்திகளை வெளியிட மாட்டோம் என அவுஸ்ரேலிய நாளிதழ் அறிவித்துள்ளது.

இந்தியக் கடற்படைக்காக பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் 6 ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தக் கப்பல் தொடர்பான 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக ’தி அவுஸ்ரேலியன்’ பத்திரிகை கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்தச் சூழலில், அந்தக் கப்பலில் உள்ள சில தொழில்நுட்ப ரகசியங்கள் தொடர்பான புதிய தகவல்களை ’தி ஆஸ்திரேலியன்’ நாளிதழ் இரண்டாவது முறையாகவும் வெளியிட்டது.

அதில், “ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலுக்கு அடியில் செல்லும்போது ஒலி அலைகள் மூலமாக மற்ற கப்பல்களை உளவுபார்க்கும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதையடுத்து, இதுதொடர்பான விசாரணைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

’தி அவுஸ்ரேலியன்’ நாளிதழ் மேலும் இதுதொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருக்கவும், ஏற்கனவே, அந்த நாளிதழின் இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ள தகவல்களை உடனடியாக நீக்கும்படியும் உத்தரவிட வேண்டும் என ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளித்துள்ள பிரான்ஸ் நாட்டு ராணுவ தளவாடம் தயாரிப்பு நிறுவனம் அவுஸ்ரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று, வரும் வியாழக்கிழமை வரை ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான வேறு எந்த ரகசியங்களையும் வெளியிட கூடாது என இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், தங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் உடனடியாக பிரான்ஸ் நாட்டு ராணுவ தளவாடம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை வரும் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில், இந்த தடைக்காலம் முடிந்த பின்னர் ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான வேறு ரகசியங்களை வெளியிடும் நோக்கம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ’தி ஆஸ்திரேலியன்’ நாளிதழ் நிர்வாகத்தினர், கோர்ட் உத்தரவை ஏற்று, இதுதொடர்பான ரகசியங்களை இனி வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.