அவுஸ்திரேலியா, சமூக ஊடக நிறுவனங்களுக்கான கடுமையான புதிய சட்டங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான பதிவேற்றங்களை உடனடியாக அகற்றத் தவறும் நிறுவனங்களைச் சேர்ந்தோருக்கு சிறை, பில்லியன் டாலர் அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.
நிறுவன ஊழியர்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். சமூக ஊடக நிறுவனங்கள், அவற்றின் வருடாந்தர மொத்த வருமானத்தில் 10 விழுக்காட்டை அபராதமாக செலுத்த நேரிடலாம்.
வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான பதிவேற்றங்கள் எவ்வளவு விரைவாக அகற்றப்பட்டன என்பதன் அடிப்படையில் நீதிமன்ற விசாரணைக் குழு தண்டனையை நிர்ணயிக்கும்.
அண்மையில் நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரின் 2 பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந்ததனை தொடர்ந்து புதிய சட்டங்கள் அறிமுகம் காண்கின்றன.
தாக்குதல்களை நடத்திய துப்பாக்கிக்காரர் அதை Facebookஇல் நேரலையாகப் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்நிலையில், நேரடி ஒளிபரப்புக் காணொளிகளின் விதிமுறைகளைக் கடுமையாக்குவதுடன், வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் கருத்துகள் குறித்த பதிவுகள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என Facebook தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சமூக ஊடகங்களுக்கு அத்தகைய தண்டனையை அறிமுகம் செய்யவிருக்கும் முதல் நாடு அவுஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.