எனது நல்ல புகைப்படத்தை வெளியிடுங்கள் – தேடப்படும் அவுஸ்ரேலிய பெண்

குற்ற வழக்கில் தேடப்படும் அவுஸ்ரேலிய பெண் ஒருவர் தனது சோகமான புகைப்படத்தை மாற்றி, புன்னகையுடன் இருக்கும் அழகான படத்தை வெளியிடும்படி காவல்துறையினரை முகப்புத்தகம் மூலம் கேட்டுக்கொண்டது வைரலாக பரவி வருகிறது.

அவுஸ்ரேலியாவை சேர்ந்த எமி சார்ப் என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டனர். இளம்பெண்ணின் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தியை தொலைக்காட்சி சேனல் ஒன்று சமூக வலைதளத்தில் செய்தியாக பதிவு செய்தது.

இந்த செய்தியை கவனித்த எமி சார்ப், சோகமான போட்டோவை மாற்றுங்கள் என்று முதல் கருத்தை பதிவு செய்தது ஆச்சரியத்தை அளித்தது.

தோற்றப்பொலிவு விஷயத்தில் மிகுந்த அக்கறை கொள்ளும் எமி, குற்ற வழக்கில் காவல் துறை  வெளியிட்டுள்ள தன்னுடைய புகைப்படம் சோகத்துடன் இருப்பது போன்று உள்ளது என்றும், அதை தயவு செய்து மாற்றுங்கள் என்றும் கருத்தை பதிவு செய்துள்ளார். அத்துடன் புன்னகையுடன் இருக்கும் அவரின் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி, இதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எமியின் தைரியமான இந்த கருத்திற்கு, சில வினாடிகளில் ‘லைக்’ எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தற்போது 64 ஆயிரம் லைக்குகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது அவரது பதிவு.

எமி தனது கருத்தை பதிவு செய்த பிறகு, காவல்துறையால்  அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.