ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக தப்பமுயன்ற பிரித்தானியர்!

ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக பப்பு நியூ கினியாவுக்கு தப்பமுயன்ற 57 வயது பிரித்தானியரான டேவிட் ஜேம்ஸ் ஜேக்சன் ஆஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுபடகில் வில் அம்புடன் சுமார் 150 கி.மீ. பயணித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பப்பு நியூகினியாவுக்கு செல்ல 4 கி.மீ. மட்டுமே இருந்த சூழல் அவர் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் போதை மருந்து தொடர்பான வழக்கில் இவர் மீது ஏற்கனவே கைதாணை இருந்துள்ளது.

இவ்வாறான சூழலில் தப்பிய ஜாக்சன், ஆஸ்திரேலியாவில் அவர் பயன்படுத்திய காரில், “நான் புதன்கிழமைக்குள் வரவில்லை என்றால், நான் இறந்திருக்க மாட்டேன். ஆனால், திரும்பி வர மாட்டேன்,” என எழுதி சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், கூடுதல் எரிபொருள், வில் அம்புடன் படகில் இவரைக் கண்ட உள்ளூர் வாசிகள் அங்குள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். மேலும், படகு பயணத்திற்காக உள்ளூர்வாசிகளிடம் அவர் பேசும் போது முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்ததால் அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

“இந்த கைது தப்பியோடி நினைப்பவர்களுக்கு ஓர் எச்சரிகையாகும். எங்களது அத்தனை தொடர்புகளையும் உறவுகளையும் பயன்படுத்தி உங்களை கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவோம்,” என ஆஸ்திரேலிய காவல்துறையின் பேச்சாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.