தெற்கு அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிப்பதற்கான சட்டத்திருந்தங்களை கொண்டுவருவதுதொடர்பான பேச்சுக்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூத்த பாலியல் தொழிலாளர்கள் இருவர் அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு சென்று கிறீன் கட்சியினரை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பெண் பாலியல் தொழிலாளர்கள் பல வருடங்களாக பாலியல் தொழிலை மேற்கொண்டவர்கள்.
தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பணிபுரிந்த துறையிலுள்ளவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக பங்களித்துவருகிறார்கள்.
அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கிறீன் கட்சியினரை சந்தித்து அந்த மாநிலத்தில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதில் காணப்படும் அரசியல் இழுபறிகள் குறித்தும் அதனால் பாலியல் தொழிலாளர்கள் எவ்வளவுதூரம் சம தொழில்வர்க்கத்தினராக நடத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் பேசியிருக்கிறார்கள்.
தெற்கு அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழில் சட்டப்படி குற்றமாகும். மீறி தொழில்முறையாக மேற்கொள்பவர்களுக்கு 2500 டொலர்கள் வரையான அபராதம் அல்லது ஆறு மாத சிறை என்ற தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளது.
இதேவேளை, பாலியல் தொழிலார்களிடம் சென்றவர்கள் கைது செய்யப்பட்டால் 1250 டொலர்கள் வரையான அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுண்டு.
முதல் தடவை கைதாகுபவர்களுக்கு மாத்திரமே இந்த அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கைதாபவர்களுக்கு இந்த தண்டனை இரட்டிப்பாக அதிகரித்துச்செல்லும். இந்த தடையானது பாலியல் தொழிலுக்கு வீடு மற்றும் காணிகளை வழங்கும் உரிமையாளர்களையும் கட்டுப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில், பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு சுமார் 13 தடவைகள் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் போது லிபரல்கள் அதனை ஆதரித்தபோதும் லேபர்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அதனை தோற்கடித்திருந்தனர்.
எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக தங்களை சந்தித்த பாலியல் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டாளர்களிடம் கிறீன் கட்சியினர் உறுதியளித்துள்ளனர்.