மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பரல் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான டொராடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். இதன் மூலம், 350 மெகாவாட் மின் நிலையத்தை 10 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் இயக்க முடியும்.
இரண்டாவது எரிவாயுப் படிமத்தில், 1000 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயுவை முதலில் மின் உற்பத்திக்கும், பின்னர் உள்நாட்டு தேவைக்கும் பயன்படுத்த முடியும்.
இந்த இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வு அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும். பகிர்வு அடிப்படையில் உற்பத்தி செய்யத் தயாராக உள்ள முதலீட்டாளருடன் இது தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்படும்.
ஏற்கனவே, 12 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal