தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்ற பி.சுசீலாவுக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
தனது இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட காலத்தால் அழிக்க முடியாத ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது 84 வயதாகிறது.
சுசீலாவின் சாதனைகளை பாராட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வருகிற மே 19-ந் திகதி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் நடிகர்-நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்-பாடகிகள் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
Eelamurasu Australia Online News Portal