பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டி ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது.
இதில் சார்ஜாவில் இடம்பெற்ற முதலாவது, இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி தொடரில் 2:0 என்ற நிலையில் இருந்தது.
இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் அபுதாபியில் நேற்று மாலை 4:30 மணியளவில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 266 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் பிஞ்ச் 90 ஓட்டங்களையும், சொன் மார்ஸ் 14 ஓட்டத்தையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 47 ஓட்டத்தையும், ஸ்டோனிஸ் 10 ஓட்டத்தையும், மெக்ஸ்வெல் 71 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், அலெக்ஸ் கரி 25 ஓட்டத்துடனும், பேட் கம்மின்ஸ் 2 ஓட்டத்துடனும ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உஷ்மன் சின்வாரி, ஜுனேட் கான், யஷிர் ஷா, இமாட் வஸிம் மற்றும் ஹரிஸ் சொஹெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 267 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 80 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் உல்ஹக் 46 ஓட்டத்தையும், சான் மசூத் 2 ஓட்டத்தையும், ஹரிஸ் சொஹெல், ஒரு ஓட்டத்தையும், மொஹமட் ரிஷ்வான் டக்கவுட் முறையிலும், அணித் தலைவர் மலிக் 32 ஓட்டத்துடனும், உமர் அக்மல் 36 ஓட்டத்துடனும், இமாட் வஸிம் 43 ஓட்டத்துடனும், உஷ்மன் சின்வாரி டக்கவுட் முறையிலும், ஜுனேட் கான் 5 ஓட்டத்துடனும், மொஹமட் ஹுசேன் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்ததுடன், யஷிர் ஷா 10 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் அடம் ஷாம்பா 4 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜெசன் பெஹ்ரண்டோர்ஃப், நெதன் லியோன், மெக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தானின் இந்த தோல்வியினால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி நாளையும் ஐந்தாவது போட்டி 31 ஆம் திகதியும் டுபாயில் இடம்பெறவுள்ளது.