அவுஸ்திரேலிய மனைவியை 10 முறை கத்தியால் குத்தி கொலைசெய்தவருக்கு கிடைத்த தண்டனை!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலைசெய்த இந்திய நபருக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களா பெண்களா மேன்மையானவர்கள் என்று நண்பர்களுடன் இடம்பெற்ற வாதத்தின்போது தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார்.

இந்த வாதத்தினால் கடுங்கோபமடைந்து சமையலறையில் போய் கத்தியை எடுத்துவந்து அவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் குத்திக்கொலை செய்த இந்திய நபருக்கு விக்டோரிய உயர்நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த Douglas Derick Eustace என்ற 44 வயது நபருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தப்படுகொலை சம்பவம் மெல்பேர்ன் Hallam பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினமன்று இடம்பெற்றது.

அன்றைய தினம் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த சமயம் இடம்பெற்ற வாதத்தின்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

முதலில் தனது மனைவியை கத்தியால் குத்திய குறிப்பிட்ட இந்திய நபரை நண்பர்கள் மறித்தனர். எனினும் அவர் திமிறிக்கொண்டுபோய் மேலும் இரண்டு தடவைகள் குத்திக்கொலை செய்திருக்கிறார்.

கொலை செய்தபின்னர் தானே பொலிஸ் நிலையத்தில் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுமார் 423 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்தசமயம் Mary Freeman என்ற ஆஸ்திரேலிய பெண்ணை தற்செயலாக சந்தித்து பழக்கம் ஏற்பட்டது.

இதன்போது அவரை காதலிப்பதாக Douglas Derick Eustace கூறியிருக்கிறார். அந்தப்பெண்ணும் உடனடியாகவே சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, திருமணமாகிய ஒரு சில மாதங்களிலேயே திருமண வாழ்க்கை இருவருக்குமே கசக்கத்தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தனது கணவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பின்னர் அவரை விவாகரத்து செய்வதற்கு Mary Freeman முடிவெடுத்திருந்தார் என்றும் அதற்கு அவரது கணவரும் சம்மதித்திருந்தார் என்றும் அந்தக்காலப்பகுதியில் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்துவந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொலைக்குற்றத்துக்கு தண்டனையாக 25 வருட சிறை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளபோதும் 20 வருடங்களில் விடுதலைக்காக குறிப்பிட்ட நபர் விண்ணப்பிக்கமுடியும் என்றும் விடுதலையான உடனேயே அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.