செவ்வாய் கிரகத்தில் வாழ ஒத்திகை

செவ்வாய் கிரகத்தில் வாழ ஒரு வருட ஒத்திகை ஆய்வை வெற்றிகரமாக முடித்த நாசா குழுவினர், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகம் செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை எவ்வாறு இருக்கும், அதனை எப்படி சமாளிப்பது என்பதை உணர செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான ஒத்திகை சோதனையை நாசா நிறுவனம் நடத்த முடிவு செய்தது.

இதற்காக அமெரிக்காவை சேர்ந்த விமானி, கட்டிட வடிவமைப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் மணல் ஆய்வாளர் என 4 பேர் மற்றும் பிரான்சு நாட்டு உயிரியல் வல்லுநர், ஜெர்மனை சேர்ந்த இயற்பியலாளர் ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவை நாசா தேர்வு செய்தது. இக்குழுவில் 2 பெண்களும் அடங்குவர்.

இக்குழு அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தங்களது ஒத்திகை ஆய்வை தொடங்கியது. தீவில் தனிமை படுத்தப்பட்ட இடத்தில் செவ்வாய் கிரக சூழ்நிலைபோல மிகப்பெரிய கூடாரம் அமைத்து அதில் தங்கி இருந்தனர். அதாவது அவர்கள் பூமியில் இருந்த போதும் பூமியில் வாழ்வது போல் இல்லாமல், தூய்மையான காற்று, திடமான உணவுகள் உள்ளிட்டவை இன்றி விண்வெளியில் வாழ்வது போலவே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுடன் அக்குழு தங்களது ஒரு வருட ஒத்திகை ஆய்வை வெற்றிகரமாக முடித்தனர். இந்த ஒத்திகை ஆய்வு செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்து உள்ளதாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.