போலி செய்திகளை முடக்கும் பணிகளில் முகநூல்!

ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொது தேர்தலையொட்டி போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய பொது தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் ஊடகம் மற்றும் தனியார் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதுதவிர பயனர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது வேட்பாளர்களின் 20 விநாடி வீடியோக்களை பார்க்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் கேன்டிடேட் கனெக்ட் எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
இத்துடன் பயனர்கள் தேர்தலில் வாக்கு செலுத்தியதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள ஷேர் யு வோட்டெட் (Share You Voted) எனும் அம்சத்தை துவங்கியிருக்கிறது. பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் கூகுள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கவும், பயனர் விவரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
இந்திய அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வாக்காளர்களை கவர முயற்சித்து வருகின்றனர். இந்தியாவில் பொது தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொது தேர்தலுக்கென கேன்டிடேட் கனெக்ட் மற்றும் ஷேர் யு வோட்டெட் என இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் மூலம் பயனர்கள் தங்களது வேட்பாளர்கள் பற்றி அறிந்து கொள்ளவும், வாக்கு செலுத்தியதை மற்றவர்களுக்கு தெரிவித்து மகிழ முடியும்