கில்லெஸ்பி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்

அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கில்லெஸ்பி, யார்க்‌ஷையர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்.

அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியான யார்க்‌ஷையரின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் அந்த அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது.

கடந்த 2014 மற்றும் 2015-ல் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்திற்கு தயாராகி வருகிறது. இவரது தலைமையில் அந்த அணி 76 சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஐந்தில் மட்டுமே தோல்வியைத் தழுவியது.

சமீபத்தில் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரின்போது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இந்த வருட சீசனோடு யார்க்‌ஷையர் அணியில் இருந்து வெளியேறுகிறார். இங்கிலாந்தில் இருந்து வெளியேற முடிவு செய்ததால் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைஅவுஸ்ரேலியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சீசன் முடியும் வரை கில்லெஸ்பிக்கு மாற்று பயிற்சியாளரை நியமிக்கும் எண்ணம் இல்லை என்று யார்க்‌ஷையர் அணி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கில்லெஸ்பியும் விண்ணப்பித்திருந்தார். அவரை ஏற்கெனவே ஆஸ்திரேலியா தேசிய அணி பயிற்சியாளராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கு அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.