அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி!

கடந்த 48 மணித்தியாலத்தில் இரண்டாவது முறையாக வடக்கு அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி தாக்கியுள்ளது.

வட மேற்கு கரையோரப்பகுதியான பில்பரா பகுதியில் மையம் கொண்டிருந்த வெரோனிகா புயல் இன்று அதிகாலை மீண்டும் 95 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பில்பராவில் நேற்று முன்தினம் சுமார் 180 மில்லிமீற்றர் வேகத்தில் மழை பெய்துள்ளது. அத்துடன் மணிக்கு 154 கிலோமீற்றர் வேகத்தில் வெரோனிக்கா தாக்கியதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

மோசமான காலநிலை தொடர்வதால் அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக சூறாவளி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.