குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது – பெனாசிர் மகன்

இந்தியாவின் குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. மு‌ஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.

முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.

தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்.