“எனக்குச் சவால் என்றால் ரொம்பப் பிடிக்கும்” எனும் சமந்தா, ‘சீமராஜா’ படத்துக்காகச் சிலம்பம் சுழற்றினார். ஆனால் “ எனக்கு உண்மையாகவே சவாலாக அமைந்தது எது என்று கேட்டால், அது வேம்பு கதாபாத்திரம்தான்” என்று விரைவில் வெளியாகவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிப் பேசத் தொடங்கினார்.
விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க, ’ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கம் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்றில்லாமல் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த சமந்தா உடனான உரையாடலின் ஒரு பகுதி இது…
வேம்பு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது! கதை கேட்டபோது நீங்களும் அதிர்ந்தீர்களா?
பின்னே! ஏற்கெனவே சில முன்னணிக் கதாநாயகிகள் பயந்து போய் மறுத்த கதாபாத்திரம் என்பதை இயக்குநர் எனக்குத் தாமதமாகத்தான் கூறினார். எனது கதாபாத்திரத்துக்கான முன்னோட்டத்தைப் பார்த்து அதிர்வது இருக்கட்டும்; எனது கதாபாத்திரத்துக்கான அறிமுகக் காட்சியைப் பற்றி எனது கணவர் நாக சைதன்யாவிடம் கூறியதும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
அவருக்குக் கொஞ்ச நேரம் பேச்சே வரவில்லை. பிறகு முழு கதாபாத்திரத்தைப் பற்றியும் கூறிய பிறகுதான் சகஜ நிலைக்கு வந்தார். வேம்பு கதாபாத்திரத்துக்கான அறிமுகக் காட்சியைப் படமாக்கியபோது ரீடேக் வாங்கிக்கொண்டே இருந்தேன். அந்தக் காட்சியைப் படம்பிடித்தபோது மொத்த செட்டுமே அதிர்ச்சியில் இருந்தது.
எப்படிப்பட்டக் கதாபாத்திரம் அது?
வேம்பு என்ற பெயரை தமிழ்ப் பெண்ணுக்குத் தவிர வேறு கதாபாத்திரத்துக்கு வைக்க முடியாது. மிகவும் நிஜமானவள். புதிதாகத் திருமணமான ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக, பகத் ஃபாசிலின் மனைவியாக நடித்திருக்கிறேன். கதாநாயகி என்றால் எப்படி இருப்பாள் என்பதற்கு நம்மிடம் ஒரு டெம்பிளேட் இருக்கிறது, அல்லவா? அதற்கு வெளியே நிற்பவள் இந்த வேம்பு.
அதனால் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் கேட்கும்போதே, இதைச் செய்வதா வேண்டாமா என்று பயந்தேன். அந்த பயம்தான் இந்தக் கதாபாத்திரத்தை, நாம் கண்டிப்பாக செய்யவேண்டும் என்பதற்கு உந்துதலாகவும் இருந்தது. பயந்துகொண்டே தைரியமான முடிவை எடுத்தற்காக, இப்போது கர்வப்படுகிறேன். காரணம், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.
எனது கதாபாத்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரைக்கதையில் ‘அன்ஃபோல்ட்’ செய்திருக்கும் விதம் வாய்பிளக்க வைக்கும். நானே டப்பிங் பேசியிருக்கிறேன். படத்தில் எத்தனை பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் எத்தனை சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இயக்குநர் உங்களை திரும்பத் திரும்ப உங்களை வியக்க வைப்பவராக இருப்பார். நாங்கள் அனைவரும் அவரது கை பொம்மைகள்.
கதையில் வேம்புவும் விஜய்சேதுபதி ஏற்றிருக்கும் ஷில்பாவும் சந்திக்கும் தருணம் உண்டா?
அதைக் கூறினால் கதையைக் கூற வேண்டியிருக்கும். ஆனால், ஒன்றைக் கூறமுடியும். திருநங்கைகளை சினிமா எப்படி சித்தரித்து வந்திருக்கிறது என்பதிலிருந்து விலகி, ஷில்பா கதாபாத்திரம் வெளியே நிற்கும் ஒன்று. ஷில்பா என்றில்லை, ஒவ்வொரு கதாபாத்திரமுமே அதனதன் உலகத்தில் நேர்மையான கதாபாத்திரங்கள்தான்.
‘சூப்பர் வுமன்’ கதாபாத்திரத்தில் நடிக்க நீங்கள் தயாரா?
கண்டிப்பாக. கேப்டன் மார்வல் மாதிரியான முழு சூப்பர் ஹீரோ ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன். கதாநாயகியை மையப்படுத்தி ஆக்ஷன் கதை என்றாலும் நடிக்க விருப்பம்தான். ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் எனக்கான கதைகளை, நானே எழுதிக்கொள்ள முடியாதே?
இருந்தாலும் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன என்பதற்குத் தமிழில் ‘சூப்பர் டீலக்ஸு’ம் தெலுங்கில் ‘மஜ்ஜிலி’. ‘ஓ பேபி’ ஆகிய படங்களுக்கும் உதாரணங்கள். இந்த மூன்று படங்களுமே கோடை காலத்தில் வெளியாகி என்னையும் ரசிகர்களையும் சில்லிட வைக்கப்போகின்றன.
கதாநாயகிக்குத் திருமணம் ஆகிவிட்டால் அவரது நடிப்புப் பயணம் முடிந்துவிட்டது என்றிருந்த காலம், இப்போது இல்லை என்று சொல்லலாமா?
பள்ளிக்கூடம் செல்வதுபோல, அதன்பிறகு கல்லூரிக்குச் செல்வதுபோலத்தான் வாழ்க்கையில் திருமணம் என்பதும் ஒரு பகுதி. வேலைக்குச் செல்லும் பெண்கள் திருமணத்துக்குப்பின் வேலைக்குச் செல்லாமல் இருப்பதில்லையே. அப்படித்தான் நான் நடிப்பையும் பார்க்கிறேன். நடிகர்கள் மீதான ஈர்ப்பு உட்பட எல்லாமே மாறிக்கொண்டு வரும் விஷயங்கள்தான். எதிர்காலத்திலும் மாறும்.
‘மஜ்ஜிலி’ தெலுங்குப் படத்துக்காக நான்காவது முறையாகக் கணவரோடு ஜோடி சேர்ந்திருக்கிறீர்கள்; சினிமாவுக்காக மீண்டும் அவரைக் காதலிக்கிறீர்களா?
கணவன் – மனைவியாக நடித்திருக்கிறோம். முன்பின் தெரியாதவர்களாக இருந்து, பின்னர் காதலிப்பதுபோல் நடித்தால் அது ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் இல்லையா. அப்படியெல்லாம் இனி நடிக்க மாட்டோம். இந்தப் படத்தை பொறுத்தவரை, கதைதான் எங்களை மீண்டும் ஜோடி சேரத் தூண்டியது.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடித்துவரும் ‘ஓ பேபி’ தெலுங்குப்படம் பற்றி நிறைய வித்தியாசமான தகவல்கள் வெளிவருகின்றனவே?
உண்மைதான். இதுவரை முழுநீள நகைச்சுவை வேடம் எதிலும் நான் நடித்ததில்லை. அப்படியொரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது என் கனவு. இயக்குநர் நந்தினி இந்தப் படத்தில் அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். முழுவதும் உடல்மொழியை மையப்படுத்திய நகைச்சுவைக் கதாபாத்திரம் இது. நிஜ வாழ்க்கையில் நான் அதிக நகைச்சுவை உணர்வுகொண்டவள். அதைக் கண்டறிந்து எனக்காக ‘ஓ பேபி’ கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவையில் ஒரு கை பார்ப்பேன். அதை நீங்களும் பார்ப்பீர்கள்.
’மீ டூ’ இயக்கத்தை பெரிதும் வரவேற்று ஆதரித்த பிரபலங்களில் நீங்களும் ஒருவர். ஆனால் சமீபகாலமாக மௌனம் காத்து வருகிறீர்களே?
வெளியிலிருந்து பார்ப்பதால் மௌனமாக இருப்பதுபோல தெரிகிறது. ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் பெண்களுக்கான சினிமா சங்கத்தில் நான் அங்கம் வகிக்கிறேன். மூன்றுவாரங்களுக்கு ஒருமுறை கூடிப் பேசுகிறோம். திரையுலகில் பணியாற்றும் பெண்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். சங்கத்தில் ‘மீ டூ’ புகார்களைத் தெரிவிக்கத் தனி மின்னஞ்சலை உருவாக்கியிருக்கிறோம்.
புகாரில் சிக்குகிறவர் யாராக இருந்தாலும், அவர் எத்தனை சக்திவாய்ந்த நபராக இருந்தாலும் வெளிப்படுத்தத் தயங்க மாட்டோம். சங்கத்தின் இந்த நடவடிக்கை, தெலுங்குத் திரையுலகில் பெண்கள் மீதான கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியிருக்கிறது. பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இது பெரிய மாற்றம் என்று என்னால் கூறமுடியும்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பல நேரம் உங்களது கிளாமரான படங்களைப் பதிவிடுகிறீர்கள். அவற்றுக்கு, உங்களைப் பின்தொடர்பவர்களின் ஏடாகூடமான எதிர்வினைகளைக் கவனிக்கிறீர்களா?
எதிர்வினைகளை நான் அதிகம் கண்டுகொள்வதில்லை. நாம் நல்லதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் குறை சொல்பவர்கள், சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். சிலர் ‘ நீ தமிழ்ப் பொண்ணுதானே, என்ன ஆங்கிலத்தில் பேசி சீன் போடுகிறாய்?” என்று கமெண்ட் போட்டார்கள். எனது குடும்பம் ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பம் என்றோ, வீட்டில் ஆங்கிலத்தில்தான் உரையாடுவோம் என்பதோ கமெண்ட் போட்டவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
நான் வேண்டும் என்றே சீன் போடவில்லை. எனது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்யும்போது நிறைய டேக் வாங்குவதற்கும் இதுதான் காரணம். இதையெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருக்க முடியுமா? எல்லோரையும் என்னால் சந்தோஷப்படுத்தமுடியாது.