ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்படவிருக்கிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதன் பிரகாரம் பிரேரணைக்கு அனுசரணை வழங்கும் பட்சத்தில் இலங்கை தொடர்பான 40/1 என்ற இந்தப் புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும்.
ஒருவேளை ஏதாவது ஒரு உறுப்புநாடு எதிர்ப்பு தெரிவித்தால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய தேவை மனித உரிமை பேரவைக்கு ஏற்படும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிடின் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 47 உறுப்பு நாடுகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படும். இந்தநிலையில் இந்தப் புதிய பிரேரணை எதனை வலியுறுத்துகிறது. அதனூடாக மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு இந்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் தற்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக இருக்கின்றனர். உண்மையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையே இம்முறை மீண்டும் இரண்டு வருடகால நீடிப்புக்கு உட்படுகின்றது.
இந்தப் பிரேரணை ஏற்கனவே 2017ஆம் ஆண்டு 34/1 என்ற பெயரில் 2019 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிவரை நீடிப்புக்குட்பட்டது. தற்போது மீண்டும் இரண்டு வருடகால நீடிப்புக்கு உட்படுகின்றது. இக்காலப்பகுதியில் அரசாங்கம் எவ்வாறு 2015 ஆம் ஆண்டு பிரேரணையை அமுல்படுத்தப்போகின்றது என்பதை சர்வதேசம் கண்காணிப்பு செய்வதற்கான ஆணை இந்தப் பிரேரணை நிறைவேறுவதன் மூலம் கிடைக்கின்றது.
புதிய பிரேரணையில் நான்கு செயற்பாட்டுப் பந்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் ஒத்துழைப்புடன் இணைந்து செயற்படவேண்டுமென்று இந்த செயற்பாட்டு பந்திகள் வலியுறுத்துகின்றன. அதேபோன்று உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் இலங்கை அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டுமென இந்த செயற்பாட்டு பந்திகள் மேலும் வலியுறுத்துகின்றன.
அதேபோன்று எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பிரேரணை அமுலாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட வேண்டுமென்றும் 2021 ஆம் ஆண்டு அது தொடர்பான முழுமையான அறிக்கையை வெளியிடவேண்டுமென்றும் இந்த 40/1 என்ற புதிய பிரேரணையின் செயற்பாட்டு பந்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதுமட்டுமன்றி இலங்கை இந்தப் பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என்றும் இந்த புதிய பிரேரணை நான்கு செயற்பாட்டு பந்திகள் ஊடாக வலியுறுத்துகின்றது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படாததன் காரணமாகவே இந்த புதிய பிரேரணையை கொண்டுவரவேண்டிய தேவை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் ஒருதரப்பினர் இவ்வாறு இரண்டு வருடகாலம் நீடிக்கப்படவேண்டியதன் அவசியம் இல்லை என்றும் நேரடியாகவே இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். அதேபோன்று கால நீடிப்பு வழங்கப்படுவதன் ஊடாகவே சர்வதேச மேற்பார்வையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் எனவே அது முக்கியமானது என்றும் மற்றுமொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
உண்மையில் இந்த சர்வதேச மேற்பார்வை என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் அவசியமானதாகும். காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை நீதியைப் பெற்றுக்கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் இந்த மக்கள் நீதி கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே சர்வதேச மேற்பார்வையை ஏற்படுத்தி மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே தற்போதைய நிலைமையில் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இலங்கை விவகாரத்தை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்ல வேண்டுமென ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் பட்சத்தில் அங்கு நிரந்தர உறுப்புரிமையையும் வீட்டோ அதிகாரத்தையும் கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவிடாமல் தடுத்துவிடும்.
எனவே சர்வதேச மேற்பார்வையின் ஊடாக முடியுமானவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதே தற்போதைய சூழலில் பொருத்தமானதாக காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் யதார்த்த ரீதியில் எவ்வாறு காணப்படுகின்றது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். இந்த கால நீடிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜெனிவாவில் தற்போது பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும் என்று தெரிவித்திருக்கின்றார்.
அதேபோன்று 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால் இலங்கை தொடர்பாக கேள்வி கேட்பதற்கான அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு கிடைத்திருக்காது. அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையாலேயே தற்போது இலங்கை தொடர்பாக கேள்வி கேட்பதற்கும் அது குறித்து அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்குமான தேவை ஏற்படுகின்றது. ஏற்கனவே மூன்றரை வருடங்களுக்குள் சிலவற்றையாவது செய்வதற்கு காரணம் இந்த மேற்பார்வையேயாகும். இந்த மேற்பார்வை நீடித்தால் தான் இன்னமும் செய்யாமல் இருக்க கூடிய பல விடயங்களில் சில விடயங்களையாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்படுவதன் ஊடாக நிச்சயமாக முன்னேற்றங்கள் நிகழத்தான் வேண்டும். காணாமல் போனோரின் அலுவலகம் சம்பந்தமான செயற்பாடுகளில் முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகின்றோம். உண்மையை வெளிப்படுத்துகின்ற ஆணைக்குழு நியமிப்பதற்கான சட்டவரைபு ஒன்றை தயாரித்திருப்பதாக சொல்கிறார்கள். அது நிறைவேற்றப்படவேண்டும். பத்து வருடங்களாக நாம் சொல்லிவருகின்ற ஒரு கூற்று உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதாகும். . அந்த உண்மையின் அடிப்படையிலேயே நீதி செய்யப்படவேண்டும் எனவும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டிருக்கின்றார்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் சர்வதேச மேற்பார்வை என்பது எந்தளவுதூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விடயத்தில் அரசாங்கமும் தமது பிரஜைகளுக்கான நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டில் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதற்கு முன்வரவேண்டும். சர்வதேசம் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தனது பிரஜைகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தற்போது இரண்டாவது தடவையாக 2015 ஆம் ஆண்டு பிரேரணை நீடிக்கப்படுகின்றது. எனவே இந்த இரண்டு வருடகாலப்பகுதியிலாவது இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். காணிகள் விடுவிக்கப்படவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் அரசாங்கம் பாரிய பொறுப்புக்களை கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.