ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எதிர்ப்பு!

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.

விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றிபெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் தலைவி படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும்.

ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

கவுதம் மேனன் இயக்கும் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கின்றார். லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எங்களால் ஜெயலலிதாவாக கங்கனாவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக பொருந்தினார், தென் இந்தியாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு இந்தி நடிகையை, கவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை உண்டாக்கும் நடிகையை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.