“நான் உங்கள் முன் நிற்கவேண்டியவன் கிடையாது, உங்களுடன் படுத்திருக்க வேண்டியவன்,”!

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நியூசிலாந்தில் நிகழ்ந்த இரண்டு மசூதிகளில் மீதான தாக்குதலில் 50 பேர் பலியாகினர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை இன மேலாதிக்கவாதி நடத்திய அந்த தாக்குதலில் பலியான சிரிய அகதிகளான தந்தையும் மகனும் முதல்கட்டமாக நடந்த ஒரே இறுதி நிகழ்வில் அடக்க செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் அருகில் உள்ள இடுகாட்டில் கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் சிரிய அகதிகளான காலித் முஸ்தபா மற்றும் அவரது 15 வயது மகன் ஹம்சா இறுதி அஞ்சலியை செலுத்தினர். அப்போது அவர்களது பெயர் ஒலிப்பெருக்கியில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெயரவிலான அடையாளத்தை கூடிய அந்த மேலாதிக்கவாதிக்கு தர விரும்பவில்லை என தாக்குதல்தாரியின் பெயர் குறிப்பிடாமலேயே தனது உரையை நிகழ்த்தியிருந்தார்.

இதில் கொல்லப்பட்ட காலித்-ன் மற்றொரு மகனான 13வயது சையத் குண்டடிப்பட்ட நிலையில் இரங்கல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். “நான் உங்கள் முன் நிற்கவேண்டியவன் கிடையாது, உங்களுடன் படுத்திருக்க வேண்டியவன்,” என தந்தை மற்றும் அண்ணனின் முன்நின்று சையத் வருந்தியதாக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஜமில் என்பவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சிரியாவிலிருந்து அகதிகளாக நியூசிலாந்துக்கு வந்த காலித் குடும்பம், போர்முனையிலிருந்து தப்பி தஞ்சமடைந்த நிலத்தில் பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளது.

லின்வூட் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் பொழுது, தாக்குதல்தாரியை திசைத்திருப்பி பல உயிர்களை காத்த ஆப்கான் அகதியான அப்துல் அசீஸூம் இறுதிநிகழ்வில் பங்கெடுத்துள்ளார்.

இந்த நிலையில், உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதால் இஸ்லாம் முறைப்படி உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை முறையாக உறுதி செய்யும் வேண்டும் என்பதால் உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் மைக் புஷ் குறிப்பிட்டிருக்கிறார்.