அவுஸ்திரேலியாவுக்கு ஆண்டுதோறும் உள்வாங்கப்படவுள்ள நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை முப்பதினாயிரம் பேரினால் குறைக்கப்படவுள்ளது.
இந்த விடயம் உட்பட முக்கிய குடிவரவு கொள்கை திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அரசாங்கம் இது தொடர்பிலான முக்கிய அறிவிப்பொன்றை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. .
பிரதான நகரங்களில் ஏற்பட்டுள்ள சன நெருக்கடி மற்றும் நகரக்கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய சேவை விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முக்கிய குடிவரவுக்கொள்கைகளில் திருத்தங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
அதனை அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு முன்வைத்திருந்தது.
இந்த மாற்றங்களின் பிரகாரம், தொழில்துறை சார்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு வருகை தரும் குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையைப்பெற்றுக்கொள்வதற்கு நகர்ப்புறங்களிலிருந்து தூர இடங்களில் சென்று ஐந்து வருடங்களுக்கு குறையாமல் வசிப்பது, வெளிநாட்டு மாணவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி போன்ற பிரதான இடங்களிலிருந்த தூர இடங்களில் வசிப்பது மற்றும் அவுஸ்திரேலியா உள்வாங்கும் வருடாந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற விடயங்களில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பாக பரவலாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த யோசனைகள் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போது அதற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றங்களின் மீதான மிக முக்கிய மாற்றமாக, நிரந்தர குடியேற்றவாசிகளை வருடாந்தம் உள்வாங்கும் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரமாக குறைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal